ஜெனிவாவில் நடந்த ஐநா மனித உரிமை கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு சிங்களர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, வைகோவை தாக்க முயன்றது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு தமிழ்புலிகள் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு திருமுருகன் காந்தி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் சென்றுள்ளனர். போராட்டம் நடத்தக்கூடாது என போலீஸ் கூறி வந்த நிலையில், தொடர்ந்து திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். சிறிது நேரம் கழித்து திருமுருகன் காந்தி மற்றும் அவருடன் இருந்த பிரவீன், சிவகுமார் ஆகியோர் அருகில் உள்ள டீ கடைக்குச் சென்றுள்ளனர். தீடீரென போலீசார் அங்கு வந்து மூவரையும் கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.