ஆதார் அட்டையை திருமணத்தை பதிவு செய்வதற்கு பயன்படுத்தலாம் – தமிழக அரசு 

ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக திருமணத்தை பதிவு செய்வதற்கு பயன்படுத்தலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  இது தொடர்பாக பதிவு துறைக்கு அனுப்பப்பட்டுள்ள உத்தரவில், திருமண பதிவின் போது மணமக்கள், பெற்றோர் மற்றும் சாட்சியங்களின் அடையாள ஆவணமாக ஆதார் அட்டையை பயன்படுத்தலாம். ஆனால் இதனை குடியுரிமை மற்றும் இருப்பிட சான்றாக ஏற்றுக் கொள்ள முடியாது.

மணமக்களின் பெற்றோரின் பெயர் மற்றும் முகவரியை சரி பார்க்கும் போது ஆதார் அட்டையில் உள்ள இன்ஷியல் மற்றும் முதல்பெயரும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இன்ஷியல் மற்றும் முதல் பெயரும் ஒரே மாதிரி உள்ளதா என உறுதி செய்த பின்னர் பதிவு செய்ய வேண்டும். மணமக்களின் பெற்றோர் இறந்து விட்டதாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால். அவர்களின் அசல் இறப்பு சான்றிதழை சரிபார்த்து அதன் நகலை ஆவணத்துடன் இணைக்க வேண்டும்.

இதேபோல் மணமக்களில் யாரேனும் ஒருவர் கணவன் அல்லது மனைவியை இழந்தவர் என குறிப்பிடப்பட்டிருந்தால். இறந்தவரின் அசல் இறப்பு சான்றிதழை சரிபார்த்து அதன் நகலை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.