இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவர உள்ள படம் மெர்சல். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தொடக்கத்தில், பெயர் சூட்டாமலேயே படப்பிடிப்பு நடந்து வந்து. விஜய் பிறந்த நாளன்று மெர்சல் என்ற பெயரில் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. நேற்று படத்தின் டீசர் வெளியாகி, மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. 24 மணி நேரத்துக்குள்ளாக ஒரு கோடிக்கும் அதிகமானோர் படத்தின் டீசரைப் பார்த்துள்ளனர். இந்த நேரத்தில், படத்தின் தலைப்பை பயன்படுத்தக் கூடாது என்று தயாரிப்பாளர் ஒருவர் நீதிமன்றம் சென்றுள்ளார்.
தயாரிப்பளார் ராஜேந்திரன் கடந்த 2014ஆம் ஆண்டு, ‘மெர்சலாயிட்டேன்’ என்ற பெயரை பதிவு செய்துள்ளாராம். அந்த பெயரை புதுப்பிக்கும் வேலைகள் தற்போது நடைபெற்று வருவதால், விஜய் நடிப்பில் தயாராகி வரும் மெர்சல் படத்தில், அந்தப் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் சென்றுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஶ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவன வழக்கறிஞர், மெர்சல் படத்துக்கு பல கோடி ரூபாய் செலவில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, படத்தின் பெயருக்கு தடை விதிக்கக் கூடாது என்றார். ஆனால், இதனை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம், ‘மெர்சல்’ பெயரில் விஜய் படத்தை வரும் அக்டோபர் 3ஆம் தேதி வரை விளம்பரம் செய்யக் கூடாது என்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. மேலும், இது குறித்து ‘மெர்சல்’ பட தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தது. இந்த தடையால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.