கேரளாவின் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமத்தில், கால்பந்து விளையாட்டின் மீது தீராத காதலுடன் சுற்றித் திரியும் ஏழு சிறுவர்களைச் சுற்றி நகர்கிறது இந்தப் படத்தின் கதை.
அவர்களில் உமர் என்ற சிறுவன், உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸியின் தீவிர ரசிகன். கால்பந்து மீது இத்தனை ஆர்வம் இருந்தாலும், முறையான பயிற்சி பெறுவதற்கான வசதிகளோ, சிறந்த பயிற்சியாளரிடம் சென்று கற்றுக்கொள்ளும் வாய்ப்போ அந்தச் சிறுவர்களுக்கு கிடைப்பதில்லை. இருப்பினும், உள்ளூர் போட்டியில் வெற்றி பெற்று, தேசிய அளவிலான போட்டி வரை செல்ல வேண்டும் என்பதே அவர்களின் மிகப்பெரிய கனவு.
அந்தக் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கும் இஸ்மாயில் கதாபாத்திரத்தில் வரும் ஆண்டனி வர்க்கீஸ், சிறுவர்களுக்கு துணையாக நிற்கிறார். அதே நேரத்தில், இஸ்மாயிலுக்கும் தனிப்பட்ட ஒரு ஆசை இருக்கிறது. சிறுவர்களின் கால்பந்து கனவும், இஸ்மாயிலின் சொந்த ஆசையும் நிறைவேறுகிறதா என்பதே படத்தின் மையக் கதை.
இஸ்மாயில் கதாபாத்திரத்தில் ஆண்டனி வர்க்கீஸ் மிகவும் இயல்பான மற்றும் நேர்மறையான நடிப்பை வழங்கியுள்ளார். கதையின் உணர்வுகளை சுமந்து செல்லும் வகையில் அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது.
ஆனால் படத்தில் அதிகமாக கவனம் ஈர்க்கும் நடிகராக இருப்பவர் உமர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள தனிஷ் பி.கே. சிறுவனின் நடிப்பில் எந்தவித செயற்கைத்தனமும் இல்லை. வசனங்களைத் தாண்டி, முகபாவனைகள் மற்றும் இயல்பான ரியாக்ஷன்கள் மூலமாகவே பல காட்சிகளை சிறப்பாக கடத்துகிறார்.
குஞ்சு கதாபாத்திரத்தில் நடித்துள்ள அமலும் தனது துடிப்பான நடிப்பால் ரசிக்க வைக்கிறார். ஐ.எம். விஜயன் உள்ளிட்ட துணை நடிகர்கள் அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக உள்வாங்கி நடித்துள்ளனர்.
ஜேக்ஸ் பிஜோயின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. பாடல்கள் மட்டுமின்றி, பின்னணி இசையும் காட்சிகளின் உணர்வை அதிகரிக்கிறது.
பைஸ் சித்திக்கின் ஒளிப்பதிவு கேரள கிராமத்தின் இயற்கை அழகையும், கால்பந்து போட்டிகளின் வேகத்தையும் அழகாக பதிவு செய்துள்ளது.
குறிப்பாக கால்பந்து போட்டிக் காட்சிகளில் இயக்குநர் நிகில் பிரேம்ராஜ் கொடுத்திருக்கும் மேக்கிங் பாராட்டுக்குரியது. விளையாட்டின் பரபரப்பை ரசிகர்கள் உணரும் வகையில் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் அதன் துல்லியமான எழுத்து. கதாபாத்திரங்களையும் அவர்களின் கனவுகளையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் விதம் படத்திற்கு உயிர் கொடுக்கிறது.
வாழ்க்கையில் வெற்றி வந்தாலும், தோல்வி வந்தாலும், கனவு காண்பதை மட்டும் நிறுத்திவிடக் கூடாது; அந்தக் கனவை நோக்கி தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்ற நேர்மறையான கருத்தை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது இந்தப் படம்.
கால்பந்தை மையமாகக் கொண்ட கதை என்றாலும், இது வெறும் விளையாட்டுத் திரைப்படமாக மட்டும் நின்றுவிடவில்லை. சிறுவர்களின் கனவு, அவர்களின் போராட்டம், அவர்களுக்கு துணையாக நிற்கும் மனிதர்களின் பாசம் என மனித உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது.
கனவு காணுங்கள்… அந்தக் கனவை நோக்கி பயணிப்பதை மட்டும் ஒருபோதும் நிறுத்தாதீர்கள் என்பதே இப்படம் சொல்லும் அழகான செய்தி.
ரேட்டிங்: ⭐⭐⭐⭐


