சாலைப்பாதுகாப்பு ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் 2016ஆம் ஆண்டில் 71,431 சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. அதில் 17,218 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 2017ஆம் ஆண்டு மே மாதம் வரை நடந்த 27,722 சாலை விபத்துக்களில் 7044 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக சாலை விபத்துக்களை குறைக்கவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் 7 குறும்படங்கள் கீழ்க்கண்ட தலைப்புகளில் தயாரித்து அனைத்து திரையரங்குகளிலும் திரையிட வழி வகை செய்யப்பட்டுள்ளது.
- வாகனத்தில் செல்லும்போது / சாலையைக் கடக்கும்போது செல்போன் பேசுவதை தவிர்த்தல்.
- நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது சீட்பெல்ட் அணிதல்,
- குடிபோதையில் வாகனங்களை இயக்குவதை தவிர்த்தல்.
- இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிதல்,
- பாதுகாப்பாக வாகனங்களை இயக்குதல்.
- சாலை விதிகளை மதித்தல்.
- 108 ஆம்புலன்ஸ் பணிகள்.
மேற்கூறிய குறும்படங்கள் தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மூலமாக அனைத்து திரையரங்குகளுக்கும் ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டது. அனைத்து திரையரங்குகளிலும் திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவோ அல்லது இடைவேளையின்போதோ குறும்படங்களை திரையிடுமாறு கோரப்பட்டுள்ளனர். ஒரு சில திரையரங்குகள் மேற்கூறிய குறும்படங்களை திரையிடவில்லை என தெரிய வருகிறது. எனவே அனைத்து திரையரங்குகளிலும் மேற்கூறிய குறும்படங்களை ஒவ்வொரு காட்சியின்போதும் திரையிட்டு சாலை விபத்துக்கள் மற்றும் அது தொடர்பான உயிரிழப்புக்களை குறைக்கவும் அரசுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இக்குறும்படங்களின் நகல்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் சரக போக்குவரத்து ஆணையர்கள் அலுவலகத்திலிருந்தும் விலையில்லாமல் பெற்றுக் கொள்ளலாம்.