465 – சினிமா விமர்சனம்

நாயகன் கார்த்திக் ராஜ் தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இதே மருத்துவமனையில் மனோபாலாவும் பணியாற்றி வருகிறார். நாயகனுடன் பணியாற்றும் பெண் டாக்டர் நாயகனை ஒருதலையாக காதலிக்கிறாள். ஆனால், நாயகனோ வேறொரு பெண்ணை காதலிக்கிறார். இருந்தும் அந்த பெண், கார்த்திக்கையே காதலித்து வருகிறாள். ஒருகட்டத்தில், அந்த பெண்ணும், மனோபாலாவும் மர்மமான முறையில் இறக்கிறார்கள். இதையடுத்து, நாயகனுக்கு வேறொரு பிரச்சினை வருகிறது. அதாவது, இவரது கையை விட்டு சென்ற பரம்பரை வீடு ஒன்று இன்னும் ஒரு வாரத்திற்குள் அவன் கைக்கு வரக்கூடிய சூழ்நிலை இருக்கிறது.

இதனால், நாயகனும், இவர்கூடவே தங்கியிருக்கும் உறவுக்கார பையனும் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றனர். இந்நிலையில், நாயகனுக்கு அடிக்கடி ஒரு பெண்ணின் உருவம் தெரிகிறது. கடைசியில், அந்த பெண்ணே தனது மனைவியாகவும் வரவே, ஆழ்ந்த குழப்பத்திற்கு போகிறார் நாயகன். இதனால், இவர் மனநலம் பாதிக்கப்பட்டு விட்டார் என்று அவரது உறவுக்கார பையன் மருத்துவமனையில் அனுமதிக்க முடிவு செய்கிறார். இறுதியில், நாயகனுக்கு என்னதான் ஆனது? இவர் கண்ணுக்கு மட்டும் தெரிந்த அந்த பெண் யார்? நாயகனின் பரம்பரை வீடு இவர் வசம் வந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை. 

நாயகன் கார்த்திக் ராஜ் வாய்ப்புகளை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். ஒருசில காட்சிகளில் இவரது கதாபாத்திரம் குழப்பிவிடுகிறது.  நாயகனின் கண்ணுக்கு மட்டுமே தெரியும் பெண் உருவமாக நடித்திருக்கும் நிரஞ்சனாவுக்கு படத்தில் போதுமான வேலை இல்லையென்பதால், அவரிடமிருந்தும் பெரிதாக நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. உறவுக்கார பையனாக வருபவருன் நடிப்பும் ரசிக்க வைக்கிறது.