3-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 9 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் சேர்ப்பு

3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 536 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. விராட் கோலி 243 ரன்களும், முரளி விஜய் 155 ரன்களும் குவித்தனர்.
பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்திருந்தது. மேத்யூஸ் 57 ரன்னுடனும், சண்டிமல் 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மேத்யூஸ், சண்டிமல் ஆகியோர் நிலைத்து நின்று விளையாடினார்கள். ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் அஸ்வின், ஜடேஜா சுழற்பந்து வீச்சை இருவரும் எளிதாக எதிர்கொண்டு விளையாடினார்கள். இதனால் இலங்கையின் ஸ்கோர் சீராக உயர்ந்து கொண்டிருந்தது. சண்டிமல் 145 பந்தில் 7 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். இன்றைய மதிய உணவு இடைவேளையின்போது இலங்கை 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் சேர்த்திருந்தது. மேத்யூஸ் 90 ரன்னுடனும், சண்டிமல் 46 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
உணவு இடைவேளை முடிந்த பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இலங்கை அணி 76.4 ஓவரில் 200 ரன்னைத் தொட்டது. மேத்யூஸ் 231 பந்தில் 13 பவுண்டரி, 2 சிக்சருடன் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய மேத்யூஸ் 111 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து சமரவிக்ரமா களம் இறங்கினார்.
தேனீர் இடைவேளையின்போது இலங்கை 4 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் சேர்த்திருந்தது. சண்டிமல் 98 ரன்னுடனும், சமரவிக்ரமா 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். முதல் இரண்டு செசனில் இந்தியா 1 விக்கெட் மட்டுமே கைப்பற்றியது. இது இந்தியாவிற்கு ஏமாற்றத்தை கொடுத்தது.
தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. சண்டிமல் மேலும் இரண்டு ரன்கள் எடுத்து தனது சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் விளையாடிய சமரவிக்ரமா 33 ரன்கள் எடுத்த நிலையில் இசாந்த் சர்மா பந்தில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த சில்வா, டிக்வெல்லா ஆகியோரை அடுத்தடுத்து டக்அவுட்டில் அஸ்வின் வெளியேற்றினார். இதனால் இலங்கை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் சண்டிமல் சிறப்பாக விளையாடினார்.லக்மலை 5 ரன்னில் மொகமது ஷமியும், காமகேயை 1 ரன்னிலும் ஜடேஜா வெளியேற்ற இலங்கை 9 343 ரன்கள் சேர்ப்பதற்குள் 9 விக்கெட்டுக்களை இழந்தது.

கடைசி விக்கெட்டிற்கு சண்டகன் களம் இறங்கினார். இவர் சண்டிமல் உடன் இணைந்து இன்றைய ஆட்ட நேரம் முடியும் வரை ஆல்அவுட் ஆகாமல் பார்த்துக் கொண்டார். இதனால் இலங்கை 3-வது நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் சேர்த்துள்ளது.ற்போது வரை இலங்கை 180 ரன்கள் பின்தங்கியுள்ளது. நாளைய நான்காவது நாள் ஆட்டத்தில் விரைவில் இலங்கையை ஆல்அவுட் செய்து விட்டு, இந்தியா அதிரடியாக விளையாடி ரன்குவித்து இலங்கைக்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது.