விஜயகாந்துக்கு எதிரான பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளரும் மாற்றப்பட்டார்

00

11

தேமுதிக தலைவர் விஜயகாந்தை எதிர்த்து போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விஜயகாந்தை எதிர்த்து பாமக வழக்கறிஞர் க.பாலு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரான தேமுதிக தலைவர் விஜயகாந்த் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பாமக சார்பில் ஏற்கெனவே உளுந்தூர்பேட்டைக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளர் இரா.ராமமூர்த்தி விலக்கிக் கொள்ளப்பட்டு, அவருக்கு பதிலாக பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான க.பாலு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் பாமக சார்பில் சென்னை மாவட்ட மகளிர் சங்கச் செயலாளர் பி.ஆக்னஸும், திமுக பொருளாளர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கோபாலும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர துறைமுகத்தில் இரா.சுரேஷ்குமார், ஆவடியில் நா.அனந்தகிருஷ்ணன், சிவகாசியில் த.சிவநாதபாபுவும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.