இருமலை போக்க கூடியதும், தோல் நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டதும், சிறுநீரை பெருக்கவல்லதும், உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியதும், பொடுகு இல்லாமல் செய்ய கூடியது என பல பயன்களை கொண்டது ஆகாய தாமரை.
குளங்கள், குட்டைகள், ஏரிகளில் அதிகளவில் இருக்கும் தாவரம் ஆகாய தாமரை. இதன் இலைகள் மிகவும் மென்மையாக இருக்கும். நீர்நிலைகளை ஆக்கிமித்துள்ள இது விலங்குகளுக்கு உணவாக பயன்படுகிறது.
பல்வேறு நன்மைகளை கொண்ட ஆகாய தாமரை நமக்கு அற்புதமான மருந்தாக விளங்குகிறது. சிறுநீரை பெருக்கும் தன்மை கொண்ட ஆகாய தாமரையானது பூஞ்சை காளான்களை அழிக்க கூடியது. நுண் கிருமிகளை அகற்றி ஆரோக்கியத்தை தருகிறது. ஆகாயத் தாமரை புண்களை ஆற்றும் மருந்தாகிறது. சிறுநீரக பைகளில் சேரும் கற்களை கரைக்கும். சிறுநீரகத்துக்கு பலத்தை கொடுக்கிறது. ஆகாய தாமரை இலைகளை பயன்படுத்தி வயிற்று கோளாறுக்கான மருந்து தயாரிக்கலாம்.
ஆகாய தாமரை இலையை அரைத்து சிறிது அரிசி மாவு, தேங்காய் பால் விட்டு சேர்த்து கலந்து எடுக்கவும். இந்த பசையை நெய்யில் சேர்த்து வதக்கவும். இதனுடன் தேவையான உப்பு, சிறிது தண்ணீர் விட்டு களி பதத்தில் தயாரிக்கவும். இதை சாப்பிட்டுவர வயிற்றுபோக்கு சரியாகும். வயிற்று கடுப்பு, வலி குணமாகும். ஆகாயத் தாமரை இலை சாற்றை பயன்படுத்தி இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம்.
ஒரு ஸ்பூன் இலை சாறு, சம அளவு பன்னீர், சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கலந்து குடிக்கும்போது வறட்டு இருமல் இல்லாமல் போகிறது. இது 10 மில்லி வரை எடுத்துக்கொள்ளலாம்.ஆகாய தாமரை இலைகளை பயன்படுத்தி தோல் நோய்களுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேங்காய் எண்ணெயுடன், இலை பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை பயன்படுத்தி வந்தால் ஆறாத புண்களும் ஆறும். தோல் நோய்கள் குணமாகும்.
ஆகாய தாமரையை பயன்படுத்தி தலை குளிப்பதற்கான தைலம் தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: ஆகாய தாமரை இலை பசை, நல்லெண்ணெய், வெட்டிவேர் பொடி, சந்தன தூள், கஸ்தூரி மஞ்சள் பொடி.நல்லெண்ணெய் விட்டு, இலை பசையை குழம்பு பதத்தில் காய்ச்சவும்.
இதனுடன் சிறிது வெட்டிவேர் பொடி, சந்தன தூள், கஸ்தூரி மஞ்சள் பொடி சேர்க்கவும். இதை தலைக்கு தேய்து குளிப்பதால் பேன், பொடுகு இல்லாமல் போகும். தலைமுடிக்கு அற்புதமான மருந்தாகிறது. கண்கள் குளிர்ச்சி அடையும். தலைச் சூட்டை தணிக்கும். கோடைகாலத்தில் ஏற்படும் வெப்பத்தை தடுக்க இது பயன்படும். வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து குளித்து வர நன்மை தரும்.