குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில், முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு, டிசம்பர் 9-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக, 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 14-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 18-ம் தேதி எண்ணப்படுகிறது.
இந்நிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி மோர்பி நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, ஷோலே இந்தி திரைப்பட வில்லன் பெயரில் ‘கப்பர் சிங் வரி’ என ஜிஎஸ்டி பற்றி ராகுல் காந்தி விமர்சனம் செய்து வரும் நிலையில் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.
பிரதமர் மோடி பேசியதாவது ”குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மிகப்பெரிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. மாநிலத்தின் குடிநீர் தேவைக்காக கை பம்புகள் மட்டுமே வழங்கப்பட்டன. இதையே மிகப்பெரிய சாதனையாக காங்கிரஸ் கூறுகிறது.ஆனால் குஜராத் மாநிலத்தின் பல பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் நர்மதா திட்டத்தை செயல்படுத்தியது பாஜக அரசுதான். மத்தியிலும் மாநிலத்திலும் மிக மோசமான முறையில் ஆட்சி நடத்திய காங்கிரஸுக்கு ஊழலை பற்றி பேசத் தகுதி இல்லை. நாட்டை சூறையாடியவர்களால்தான் கொள்ளையைப் பற்றி சிந்திக்க முடியும்” எனக்கூறினார்.