தமிழக மக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதோடு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வி.கே.சசிகலா (அதிமுக பொதுச்செயலாளர்)
சாதி வேறுபாடுகளை களைந்து சமத்துவம், சகோதரத்துவம் நிறைந்து நின்று பொங்கும் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதத்தில் இறைவனையும், இயற்கையையும் கொண்டாடும் திருநாள் பொங்கல் பண்டிகை. உலகில் வாழும் மக்கள் பல்வேறு தொழில்கள் செய்து வந்த போதும் உழவுத்தொழில்தான் முதன்மையானதாகப் போற்றப்படுகிறது. இத்தகைய பெருமைக்கும், புகழுக்கும் உரிய உழவர்களின் நலனை பேணிக்காத்திடவும், அவர்களின் பெருவாழ்வு, மனமகிழ்ச்சி சிறந்திடவும் ஜெயலலிதாவின் அரசு பல்வேறு சீரிய திட்டங்களை தீட்டி விவசாயிகளை காத்து வருகிறது. பொங்கலை தமிழக மக்கள் அனைவரு்ம இன்புற்று கொண்டாடி மகிழ ஜெயலலிதாவின் அரசு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கியுள்ளது. என் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
மு.க.ஸ்டாலின் (திமுக செயல் தலைவர்)
தமிழகம் இன்று வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியிருக்கிறது. விவசாயிகளின் வாழ்வு நலிந்துள்ளது. தமிழர்களின் மரபார்ந்த வீர விளையாட்டான ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கு அரசாங்கத்துடன் சட்டவழியிலான மிகப்பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. இத்தகைய நெருக்கடியான சூழலிலும், நமது போராட்டங்களுக்கான ஊக்கம் பெற பொங்கல் விழா கொண்டாட்டங்கள் தேவைப்படுகின்றன.
வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்)
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி இல்லை, விவசாயிகள் தற்கொலை என சோதனைகள் நம்மை முற்றுகையிட்டாலும், அவற்றை நெஞ்சுறுதியுடன் எதிர்கொள்வோம் என்ற நம்பிக்கையோடு, தமிழக மக்களுக்கும், உலகுவாழ் தமிழர்களுக்கும் தைப் பொங்கல் வாழ்த்துகள்.
டாக்டர் ராமதாஸ் (பாமக நிறுவனர்)
உலகெங்கும் உள்ளவர்களுக்கு உணவையும், இனிப்பையும் வழங்கும் விவசாயிகளைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் உட்பட எந்த அதிகார சக்தியும் உதவிக்கு வராதது தான் பெருஞ்சோகம். மற்றொரு பக்கம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் கலாச்சாரத்தின் மீது திட்டமிட்டு நடத்தப்படும் இந்த தாக்குதலைத் தடுக்க முடியாத தமிழக ஆட்சியாளர்கள், வெற்று வசனம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். தமிழ் புத்தாண்டு இனிமையான மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் வழங்க வேண்டும்.
விஜயகாந்த் (தேமுதிக தலைவர்)
பொங்கல் திருநாளில் விவசாயிகள்தான் அதிகமாக கொண்டாடப்படுவார்கள். ஆனால் இந்த ஆண்டு விவசாயம் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தினாலும், பயிர் கருகியதாலும் பல விவசாயிகள் தற்கொலைக்கு ஆளாகியுள்ளார்கள். தமிழர்களுடைய பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு நடக்குமா, நடக்காதா என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு அளிக்காதது தமிழக இளைஞர்கள் மத்தியில் வருத்தம் அளிக்கிறது. இந்த பொங்கல் திருநாள் மக்கள் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தி ஒளிமயமான எதிர்காலம் உருவாக வேண்டும்.
தமிழிசை சவுந்தரராஜன் (தமிழ்நாடு பாஜக தலைவர்)
கறுப்பு பணத்தை ஒழிப்பதைப் போல் லஞ்சம், வறுமை, ஊழல் ஒழிந்து ஒரு வெளிப்படையான நிர்வாகம் மக்களுக்கு கிடைக்க வேண்டும். இந்த பொங்கல் மட்டுமல்ல வரும் அனைத்து பொங்கல்களும் தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் பொங்கலாக அமைய வேண்டும்.
சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ் கமிட்டி தலைவர்)
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் தொன்று தொட்டு பல காலமாய் தமிழர் வீர விளையாட்டாம் ஜல்லிக்கட்டு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபின் எல்லாப் பொங்கலின் போதும் ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று வாக்குறுதி தந்து நிறைவேற்றப்படாமல் போவது வருத்தத்திற்கு உரியது. பாராளுமன்றம் நடைபெறாத சூழலில் அவசரச் சட்டம் கொண்டு வந்து உச்சநீதி மன்ற அனுமதியைப் பெற்று ஜல்லிக்கட்டு இவ்வாண்டு நடைபெற மத்திய- மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். இல்லையேல் மக்களே ஜல்லிக்கட்டை நடத்த முயற்சிக்கும் சூழல் இப்போது நிலவுகிறது.
ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்)
இல்லங்கள் தோறும் பால் பொங்குவது போல் தமிழ் மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும். விவசாயிகளின் வாழ்வில் இனியாவது இன்பம் கனியட்டும்.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர்)
வறட்சி, விவசாயிகள் தற்கொலை, ஜல்லிக்கட்டுக்கு தடை என எவ்வளவு சிரமங்கள் இருப்பினும் தன்னம்பிக்கை இழக்காமல் பொங்கல் விழாவை கொண்டாடுவோம். தமிழர்களின் பண்பாட்டையும், உரிமையையும் பாதுகாக்க உறுதியேற்போம்.
அன்புமணி ராமதாஸ் (பாமக இளைஞர் அணி தலைவர்)
புதிதாக புலரும் தைத்திங்கள் மக்களின் துன்பத்தையும் வருத்தத்தையும் நீக்கும் என்பதே என் நம்பிக்கை. அந்த நம்பிக்கை நிஜமாகி அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்சி பொங்க வேண்டும். நாட்டில் அமைதியும், முன்னேற்றமும் செழிக்க வேண்டும்.
ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர்)
தமிழகத்தில் காலம் காலமாக நடத்தப்பட்டு வந்த ஏறு தழுவுதல் என்னும் ஜல்லிக்கட்டு போட்டியை இந்த ஆண்டும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளை மாட்டை நீக்கி சட்டம் இயற்றாத பாஜக அரசே இந்த முட்டுக்கட்டைக்கு முழுப்பொறுப்பு.
கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்)
இந்த ஆண்டு வேளாண்மை மட்டுமல்ல விவசாயிகளின் உயிரும் கருகிவிட்டது. சொல்ல முடியாத துயரம் என்றாலும் இந்த இருட்டு நிரந்தரமாகாமல் புதியதோர் விடியல் பிறக்கட்டும். பகுத்தறிவாளர்கள் இப்படித்தான் சிந்திப்பர்.
ஆர்.சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர்)
தமிழக விவசாயிகளின் நிலை, வறட்சி, ஜல்லிக்கட்டுக்கு தடை என பல சோதனைகள் பொங்கல் கொண்டாட்டத்தை குறைத்திருக்கின்றன. ஜல்லிக்கட்டு என வீரவிளையாட்டை, பாரம்பரிய கலையை யாரும் தடுக்க முடியாது என்று நீதித்துறை மூலம் போராடி வெற்றி காண்போம்.
மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஆம் ஆத்மி கட்சி தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன், மக்கள் தேசிய கட்சி நிறுவனத் தலைவர் சேம. நாராயணன் உள்ளிட்ட தலைவர்களும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.