புதுச்சேரி அரசு மருத்துவமனையில் மின் தடை காரணமாக சிகிச்சையில் இருந்த 3 நோயாளிகள் மரணடைந்திருப்பது கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயந்திரம் மூலம் ரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட மின் தடையால் 3 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.சுசீலா (77), அம்சா (55), மற்றும் கணேஷ் (54) ஆகியோர் சிகிச்சையின் போது மின் தடையால் உயிரிழக்க, மற்றொருவர் உயிருக்குப் போராடி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து ஆத்திரமடைந்த நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனையில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட போலீஸ் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பணியில் இருந்த மருத்துவர், செவிலியர், தொழில்நுட்ப ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் அறிவித்து மேலும் கூறியபோது, மின் தடை காரணமாகவே நோயாளிகள் இறந்ததாகத் தெரிகிறது. இது குறித்து உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.