பாளையங்கோட்டை திமுக வேட்பாளரை மாற்றுங்கள்- காங்கிரஸ் தொண்டர்கள் போர்க்கொடி!

Congressபாளையங்கோட்டையில் திமுக வேட்பாளர் மீது அதிருப்தி நிலவுவதால் பலமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. திருநெல்வேலியில் கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் கே. ராம்நாத் திங்கள்கிழமை அளித்தப் பேட்டி: பேரவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன.=இத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. கருணாநிதி 6 ஆவது முறையாக முதல்வராக பதவி ஏற்பார். தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை கருணாநிதி சிறப்பாக நிறைவேற்றி இந்தியாவில் தமிழகம் முன்னோடி மாநிலமாக மாற்றுவார். திருநெல்வேலி மாவட்டத்தில் 10 பேரவைத் தொகுதிகளிலும் இக்கூட்டணி 100 சதவீத வெற்றியை பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் பாளையங்கோட்டை தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள திமுக வேட்பாளர் மைதீனைகானை மாற்றம் செய்ய வேண்டும் என தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.கடந்த 3 ஆண்டுகளாக இத்தொகுதியில் மக்கள் பிரச்னைகளுக்கு காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளது. வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை, கல்வித்துறையில் முறைகேடு போன்ற அதிமுக ஆட்சி அவலங்களை சுட்டிக் காட்டும் வகையிலும் சிறுபான்மை மக்களின் கோரிக்கையை வலியுறுத்தியும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.எனவே பாளையங்கோட்டை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றி பிரகாசமாக உள்ளது. வேட்பாளர் தொடர்பாக மக்களிடையே குழப்பம் ஏற்படும் வகையில் நடைபெறும் போராட்டங்களை தடுக்க வேண்டும்.திமுக கூட்டணிக்கு சாதகமான சூழலில் தற்போது வேட்பாளரின் பலஹீனத்தால் இத்தொகுதியை திமுக கூட்டணி இழந்து விடக்கூடாது. எனவே பலமான வேட்பாளரை நிறுத்த வேண்டும். இத்தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி தந்தால் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வோம் என்றார் அவர்.பேட்டியின்போது, கட்சியின் மாநில விவசாய அணித் தலைவர் கே. சங்கரபாண்டியன், மாவட்டத் துணைத் தலைவர் வாகைகணேசன், பொதுச்செயலர்கள் எஸ். ராஜேஸ் முருகன், சிவசுப்பிரமணியன், காவிரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.