படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் :ஸ்டாலின்

“தமிழக மீனவர்களை தாக்குவதும், அடாவடியாக கைது செய்வதும், அவர்களின் மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்வதுமான அராஜகத்தில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.மார்ச் 4 ஆம் தேதி அதிகாலையில் நாகபட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.

மார்ச் 5 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்களும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஜெகதாம்பட்டினம் மீனவர்களுமாக 24 பேரை கொத்தாக இலங்கை கடற்படையினர் பிடித்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் செல்கிறார்கள். அவர்களின் பொருளாதார நிலைமை, வாழ்வாதாரம் பற்றியெல்லாம் துளியும் கவலைப்படாமல் இலங்கை அரசு தமிழக மீனவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வருவதை மனித உரிமைகளை மதிக்கும் எந்த அரசாலும் அனுமதிக்க முடியாது.அதனால் தான் தமிழக மீனவர்களை இரக்கமற்ற முறையில் கைது செய்யும் இலங்கை அரசின் போக்கை கண்டிக்க வேண்டும் என்றும், இதுவரை கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம்.இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் இருநாட்டு மீனவர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகளுக்கு கூட இலங்கை அரசு செவி சாய்க்க மறுப்பதை இந்திய அரசு தட்டிக் கேட்காமல் இருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக 5.11.2016 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் “தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வன்முறை தாக்குதல் நடத்தக் கூடாது” என்றும், “மீனவர்களை விடுவிப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்க வேண்டும்” என்றும் எடுக்கப்பட்ட முடிவினை இலங்கை அரசு அறவே மதிக்க முடியாது என்று அடம்பிடிப்பது இரு நாட்டு நல்லுறவுக்கு நிச்சயம் வலு சேர்ப்பதாக இருக்க முடியாது.இலங்கை அரசின் பிடிவாதத்தால் இலங்கை சிறைகளில் வாடும் 85 மீனவர்களும், 128க்கும் மேற்பட்ட படகுகளும் விடுவிக்கப் படவில்லை

. அவர்களின் குடும்பங்கள் இதனால் தாங்க முடியாத துயரத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.வாழ்வாதாரத்திற்கு பணமில்லாமல், குழந்தைகளை பள்ளிக்குக் கூட அனுப்ப முடியாமல் அந்த குடும்பங்கள் எல்லாம் தடுமாறி நிற்பதை மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும், மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும் வேடிக்கை பார்ப்பது வேதனையாக இருக்கிறது.அதிமுக அமைச்சர் ஓ. எஸ். மணியனை மீனவர்கள் முற்றுகையிட்டு சரமாரி கேள்வி எழுப்பிய காட்சிகள் தொலைக்காட்சிகளில் வருவதைப் பார்த்தால், அந்த மீனவர்கள் எந்த அளவிற்கு வறுமையிலும், வாழ்வாதாரம் பறிபோன கோபத்திலும் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக பறிமுதல் செய்யப்பட்ட படகுகளும் பயனற்றுப் போகும் வகையில் இலங்கை அரசு வேண்டுமென்றே அவற்றை விடுவிக்க மறுப்பது மீனவர்களின் எதிர்காலத்தை முற்றிலும் முடக்கி வைக்கும் செயலாகவே உள்ளது.

ஆகவே அதிமுக அரசு தங்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள நடக்கும் அதிகாரப் போட்டியில் தமிழக மீனவர்களின் நலனை கோட்டை விட்டு விடாமல் இருக்க வேண்டும் என்றும், மத்திய அரசுக்கு நேரடியாக அழுத்தம் கொடுத்து 85 மீனவர்களையும், 128 படகுகளையும் மீட்பதற்கு உடனடி நடவடிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எடுக்க வேண்டும்.

கடிதம் எழுதுவதோடு தன் பணி முடிந்து விட்டது என்று இருக்காமல் மீன்வளத்துறை அமைச்சரை உடனடியாக டெல்லிக்கு அனுப்பி சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை சந்தித்து தூதரக முயற்சிகளை முடுக்கி விட்டு மீனவர்களையும், படகுகளையும் இனியும் கால தாமதம் செய்யாமல் விடுவிக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள்தானே என்று மவுனம் சாதிக்காமல் மத்திய அரசும் உடனடியாக வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுத்து, தூதரக ரீதியாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனே மீட்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக மீனவர்களும் இந்திய மீனவர்களே என்ற எண்ணத்தில் மத்திய அரசு செயல்பட்டு, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலையும், இதுபோன்ற அத்துமீறிய கைதுகளையும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.