நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயில்: ஒடிஸா-தெலங்கானாவில் அனல் காற்றுக்கு 65 பேர் உயிரிழப்பு

images (1)நாடு முழுவதும் உள்ள 25-க்கும் மேற்பட்ட வானிலை ஆய்வு மையங்கள் அளித்துள்ள தகவல்களின்படி, பெரும்பாலான மாநிலங்களில் 40 டிகிரி செல்சியஸுக்கு அதிகமான வெப்பநிலை நீடிக்கிறது.அனல் காற்று வீசுவதன் காரணமாக இதுவரை, தெலங்கானாவில் 35 பேரும், ஒடிஸாவில் 30 பேரும் உயிரிழந்துவிட்டனர்.
இதுகுறித்து இந்திய வானிலை மையத்தின் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரத்தின் விதர்பா, பிகார், ஜார்க்கண்ட், ஒடிஸா, மேற்கு வங்கம், பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசத்தின் ராயலசீமை பகுதி, தெலங்கானா, தமிழ்நாடு, புதுச்சேரி, ஆகிய மாநிலங்களில் கடும் அனல் காற்று வீசுகிறது. அதிகபட்சமாக, ஒடிஸாவின் சோன்பூரில் 45.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், மகாராஷ்டிரத்தின் விதர்பா பகுதியில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், சந்திராபூரில் 44.36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளன.ராஜஸ்தான் மாநிலத்தின் கோடா பகுதியில் அதிகபட்சமாக 43.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மேலும், மகாராஷ்டிரத்தின் மையப் பகுதி, மராத்வாடா ஆகிய பகுதிகளிலும் அனல் காற்று வீசத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ஆந்திரம், தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகி வருகிறது.தெலங்கானாவின் பல்வேறு இடங்களில், அடுத்த 5 நாள்களுக்கு 40 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும். இதுவரை, அந்த மாநிலத்திலேயே அதிகபட்சமாக நிஜாமாபாத் மாவட்டத்தில் 44 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது என்று அந்த வலைதளத்தில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, தெலங்கானா மாநில கல்வித் துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:வரும் 24ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 12ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அனல் காற்று கடுமையாக வீசி வருவதால், வரும் 16ஆம் தேதி முதல் முன்கூட்டியே கோடை விடுமுறை அளிப்பது என்று தீர்மானிப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.