இந்தியாவில் முதல் முறையாக குழந்தை நன்கொடையாளரின் நுரையீரலைப் பயன்படுத்தி பெரியவருக்கான நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த கிளெனீகல்ஸ் மருத்துவமனை சென்னை.
தீவிரமடைந்த ‘முடக்கு வாதம் சார்ந்த நுரையீரல் நோயால்’ பாதிக்கப்பட்டிருந்த 39 வயது பெண்மணி, மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் ஆக்சிஜன் ஆதரவு ஏதுமின்றித் தானாகவே நடக்கும் அளவுக்குக் குணமடைந்து, சிகிச்சைக்குப் பின் 12 நாட்களுக்குள் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
சென்னை 25 ஜூன் 2026: ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சென்னை கிளெனீகல்ஸ் மருத்துவமனை ஆனது, இந்தியாவில் முதல்முறையாக குழந்தை நன்கொடையாளரின் நுரையீரலைப் பயன்படுத்தி – முதிர் வயதினருக்கான நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது. இதன் மூலம், தீவிரமடைந்த ‘முடக்கு வாதம் சார்ந்த நுரையீரல் நோயால்’ (RA-ILD) பாதிக்கப்பட்டிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 39 வயதுப் பெண்மணிக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
இப்பயனாளி கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த RA-ILD நோயுடன் போராடி வந்தார். முடக்கு வாதத்துடன் தொடர்புடைய இந்தத் தீவிரமான பாதிப்பு, நுரையீரலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி, சுவாசத்தை பெருமளவில் பாதித்துள்ளது. தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்தபோதிலும், அவரது உடல்நிலை ஒரு கட்டத்தில் மோசமடைந்து, நிமிடத்திற்கு 1 லிட்டர் என்றிருந்த அவரது ஆக்சிஜன் தேவை நிமிடத்திற்கு 8 லிட்டராக அதிகரித்தது. இது அவரது வாழ்க்கைத் தரத்தையும், அன்றாடப் பணிகளைச் செய்யும் திறனையும் கடுமையாகப் பாதித்தது.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண்மணி, சென்னை கிளெனீகல்ஸ் மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவின் இயக்குநர் டாக்டர் கோவினி பாலசுப்பிரமணியனை அணுகினார். இவருக்குத் துணையாக, நுரையீரல் சிகிச்சை, இன்டர்வென்ஷனல் நுரையீரல் சிகிச்சை மற்றும் தூக்க மருத்துவப் பிரிவின் மூத்த ஆலோசகர்களான டாக்டர் சிந்துரா கோகண்டி, டாக்டர் விமி வர்கீஸ் மற்றும் நுரையீரல் சிகிச்சை பிரிவின் மூத்த ஆலோசகர் டாக்டர் சுஷ்மிதா ராய்சௌத்ரி ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் செயல்பட்டனர்.
சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக இந்த மருத்துவக் குழுவை அணுகினார். இருப்பினும், அவரது உயரம், உடல் எடை மற்றும் நுரையீரலின் தீவிரமான பாதிப்பு நிலை ஆகியவற்றின் காரணமாக, அவருக்குப் பொருத்தமான ஒரு நன்கொடையாளரைக் கண்டறிவது மிகவும் சவாலானதாக இருந்தது. அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், அவர் பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது. இது அவருக்கு உயிர் காக்கும் மாற்று அறுவை சிகிச்சை எவ்வளவு அவசரமாகத் தேவை என்பதை உணர்த்தியது.
இந்நிலையில், சாலை விபத்து ஒன்றில் மூளைச்சாவு அடைந்த சிறு வயது குழந்தை நன்கொடையாளர் ஒருவர் குறித்து அரசு அதிகாரிகளிடமிருந்து மாற்று அறுவை சிகிச்சை குழுவுக்குத் தகவல் கிடைத்தது. இது போன்ற சூழல் மிகவும் அரிதானது என்பதால், இந்தச் சிறு குழந்தையின் நுரையீரலை ஒரு முதிர் வயதினருக்குப் பாதுகாப்பாகப் பொருத்த முடியுமா என்பதைத் தீர்மானிக்க மருத்துவக் குழு விரிவான ஆய்வையும் திட்டமிடலையும் மேற்கொண்டது. அளவு மற்றும் உடலமைப்பில் கணிசமான வேறுபாடுகள் இருந்தபோதிலும், இந்த உறுப்புகளை வெற்றிகரமாகப் பொருத்த முடியும் என்று குழுவினர் முடிவு செய்தனர்.
இந்த மாற்று அறுவை சிகிச்சை முறை பல்வேறு சிக்கலான சவால்களைக் கொண்டிருந்தது. குறிப்பாக, நன்கொடையாளரின் இரத்த நாளம் மற்றும் மூச்சுக்குழாய் அமைப்புகளை முதிர் வயதான பயனாளியின் அமைப்புகளுடன் மாற்றியமைத்து இணைப்பது பெரும் சவாலாக இருந்தது. இத்தகைய சிக்கல்கள் இருந்தபோதிலும், பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த இந்த மாற்று அறுவை சிகிச்சை குழுவினர், எந்தவொரு செயற்கை பம்ப் (ECMO/Pump) ஆதரவும் இன்றி இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை குறித்து ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சென்னை கிளெனீகல்ஸ் மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவின் இயக்குநர் டாக்டர் கோவினி பாலசுப்பிரமணியன் கூறுகையில்: “நன்கொடையாளர் மற்றும் பயனாளியின் நுரையீரல்களுக்கு இடையே இருந்த உடல் உறுப்புகளில் உள்ள வேறுபாடு காரணமாக, இது மிகவும் சிக்கலான ஒரு மாற்று அறுவை சிகிச்சையாக இருந்தது. இப்படியான இக்கட்டான சூழ்நிலையிலும், எங்களது நோயாளிக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் உதவி புரிந்த நன்கொடையாளரின் குடும்பத்தினருக்கு நாங்கள் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இச்சம்பவம் உறுப்பு தானத்தின் மகத்தான தாக்கத்தை உணர்த்துவதுடன், இந்தியாவில் மேம்பட்ட மாற்று அறுவை சிகிச்சை மருத்துவத்தின் சாத்தியக்கூறுகளையும் வெளிப்படுத்துகிறது,” என்றார்.
வெற்றிகரமான இந்த மாற்று அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, அந்தப் பெண்மணி வியக்கத்தக்க வகையில் குணமடைந்து 12 நாட்களுக்குள் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குச் சென்றார். இப்போது எவரது உதவியுமின்றித் தானாகவே நடப்பதுடன், அவருக்கு இனி ஆக்சிஜன் ஆதரவும் தேவைப்படவில்லை.
இந்த சாதனை இந்திய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். உடல் உறுப்புகளின் அளவில் இருக்கும் முரண்பாடுகள் மற்றும் முக்கியமான இரத்த நாளங்கள் மற்றும் காற்றுப்பாதை அமைப்புகளை இணைப்பதில் உள்ள சிக்கல்கள் காரணமாக, முதிர் வயதினருக்கான சிகிச்சைக்குக் குழந்தை நன்கொடையாளர்களின் நுரையீரல்கள் அரிதாகவே பரிசீலிக்கப்படுகின்றன. இந்த வெற்றிகரமான முடிவு, உறுப்பு தானப் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும், மாற்று அறுவை சிகிச்சைக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும், இறுதி கட்ட நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் காத்திருப்புப் பட்டியலிலான இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கும் மாபெரும் சான்றாக மாறியுள்ளது.
இந்த சாதனை குறித்து ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான கிளெனீகல்ஸ் மருத்துவமனைகளின் சென்னை மற்றும் ஹைதராபாத் கிளஸ்டர் முதன்மைச் செயல் அதிகாரி (CEO) திரு. R. Y. பரத் காந்த் ரெட்டி கூறுகையில், “இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறுவை சிகிச்சை முறை, நோயாளிகளை மையமாகக் கொண்ட மேம்பட்ட மருத்துவச் சேவையை வழங்குவதில் எங்களுக்கிருக்கும் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது; மேலும், எங்களது பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த மாற்று அறுவை சிகிச்சை குழுவின் நிபுணத்துவத்தையும் இது வெளிப்படுத்துகிறது. 13 வயது சிறுவனுடைய நுரையீரலைப் பயன்படுத்தி, இந்தியாவில் முதன்முறையாக முதிர் வயதினருக்கான நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்திருப்பது, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறையிலான இத்தகைய புதுமையான அணுகுமுறைகள், உயிர் காக்கும் உறுப்புகளுக்காகக் காத்திருக்கும் கவலைக்கிடமான நோயாளிகளுக்கு எவ்வாறு புதிய நல்வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் என்பதை உணர்த்துகிறது,” என்றார்.
ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சென்னை கிளெனீகல்ஸ் மருத்துவமனையின் முதன்மைச் செயல்பாட்டு அதிகாரி (COO) மற்றும் மருத்துவமனைத் தலைவர் திருமதி. S. நிரஞ்சனி கூறுகையில், “சென்னை கிளெனீகல்ஸ் மருத்துவமனையில், பல்வேறு மருத்துவத் துறைகளின் நிபுணத்துவம் மற்றும் புதுமையின் துணையோடு மேம்பட்ட மருத்துவச் சேவையை வழங்குவதில் நாங்கள் எப்போதும் உறுதியுடன் இருக்கிறோம். இந்த மைல்கல் சாதனை, சிக்கலான மருத்துவப் பாதிப்புகளைக் கொண்ட நோயாளிகளுக்குச் சாத்தியமான மிகச் சிறந்த மருத்துவத் தீர்வுகளை வழங்குவதில் எங்களது குழுவினரின் தளராத அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது,” என்றார்.
இந்த சாதனையின் மருத்துவ முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சென்னை கிளெனீகல்ஸ் மருத்துவமனையின் மருத்துவச் சேவைகளின் தலைவர் டாக்டர் பிஸ்வரூப் பால் கூறுகையில், “இந்த வெற்றிகரமான மாற்று அறுவை சிகிச்சை, ஒருங்கிணைந்த பன்முக மருத்துவச் சேவை மற்றும் மருத்துவ சிறப்பின் வலிமையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் மிக உயர்ந்த தரத்தை உறுதி செய்யும் அதே வேளையில், மாற்று அறுவை சிகிச்சை மருத்துவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் எங்களது அர்ப்பணிப்பை இது வெளிப்படுத்துகிறது,” என்றார்.
அறுவை சிகிச்சைக்குப் பின் அந்தப் பெண்மணியின் உடல்நிலை வியக்கத்தக்க வகையில் மிக வேகமாக முன்னேற்றமடைந்துள்ளது. அறுவை சிகிச்சை முடிந்த மறுநாளே அவரது செயற்கை சுவாசக் குழாய் தேவை அகற்றப்பட்டது; மூன்றாவது நாளில் அவர் ஆக்சிஜன் ஆதரவு ஏதுமின்றித் தானாகவே நடக்கத் தொடங்கினார்; மேலும், பன்னிரண்டாவது நாளில் அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இன்று, அவர் எவ்வித சிரமமுமின்றி இயல்பாக சுவாசிப்பதுடன், தனது அன்றாடப் பணிகளையும் தன்னிச்சையாக கவனித்து வருகிறார். இது அவரது வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ள ஒரு மகத்தான முன்னேற்றத்தைக் காட்டுகிறது.
ஃபோர்டிஸ் நெட்வொர்க் மருத்துவமனையான சென்னை, பெரும்பாக்கம் கிளெனீகல்ஸ் மருத்துவமனை பற்றி:
ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நெட்வொர்க் மருத்துவமனையின் ஒரு பகுதியான சென்னை, சோழிங்கநல்லூர், பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள கிளெனீகல்ஸ் மருத்துவமனை, இந்தியாவின் முன்னணி குவாட்டர்னரி கேர் (Quaternary care) பன்நோக்கு மருத்துவமனையாகவும், புகழ்பெற்ற பல்லுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையமாகவும் திகழ்கிறது. இது கல்லீரல், நரம்பியல், இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகப் பராமரிப்பு ஆகியவற்றில் சிறந்த நிபுணத்துவம் பெற்றது. NABH, NABL மற்றும் NABB ஆகிய அங்கீகாரங்களைப் பெற்றுள்ள இந்த மருத்துவமனை, 241 படுக்கை வசதிகளைக் கொண்டுள்ளதுடன், நவீன கேத்லேப் (CathLab), 13 அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள், ரோபோடிக் உதவியுடனான அறுவை சிகிச்சை அமைப்புகள், டெஸ்லா எம்ஆர்ஐ (Tesla MRI), அணு மருத்துவச் சேவைகள் மற்றும் அதிநவீன இமேஜிங் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட மேம்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுள்ளது. மேலும், இந்த மருத்துவமனை அவசர காலங்களில் சரியான நேரத்தில் தீவிர சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்யும் விரிவான அவசரக்கால சேவைகளையும் வழங்குகிறது. கிளெனீகல்ஸ் மருத்துவமனைகள், உலகளவில் ஒருங்கிணைந்த மற்றும் உயர்தர சுகாதாரச் சேவைகளை வழங்க அர்ப்பணிக்கப்பட்ட ஐஹெச்ஹெச் ஹெல்த்கேர் (IHH Healthcare) அமைப்பின் ஒரு பகுதியாகும். மேலும் தகவலுக்கு விசிட் : https://www.gleneagleshospitals.co.in/chennai/perumbakkam
ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் லிமிடெட் பற்றி:
ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் லிமிடெட், இந்தியாவில் ஒருங்கிணைந்த சுகாதாரச் சேவைகளை வழங்கும் ஒரு முன்னணி நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் மருத்துவச் சேவை பிரிவுகளில் முதன்மையாக மருத்துவமனைகள், நோயறிதல் மையங்கள் (Diagnostics) மற்றும் பகல்நேர சிறப்புச் சிகிச்சை (Day care) வசதிகள் ஆகியவை அடங்கும். தற்போது, இந்நிறுவனம் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 36 மருத்துவ வசதிகளை (கூட்டு முயற்சிகள் மற்றும் O&M வசதிகள் உட்பட) இயக்கி வருகிறது. இந்நிறுவனத்தின் நெட்வொர்க் 6,000-க்கும் மேற்பட்ட செயல்பாட்டு படுக்கைகளையும் (O&M படுக்கைகள் உட்பட) மற்றும் 400 நோயறிதல் ஆய்வகங்களையும் கொண்டுள்ளது.


