யோகி பாபுவின் 300-வது திரைப்படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’ படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. ரா. ராஜ்மோகன் இயக்கியுள்ள இப்படம் ஜூலை 17-ஆம் தேதி வெளியாகிறது.
விழாவில் பேசிய யோகி பாபு, 300-வது படம் என்ற எண்ணிக்கையில் பெருமைப்படாமல், நாகேஷ், மனோரமா போன்ற ஜாம்பவான்களைப் போல இன்னும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதே தனது இலக்கு என்றார்.
மேலும், “எனக்கு கதாநாயகி முக்கியமல்ல, கதைதான் முக்கியம். நல்ல கதையுடன் வரும் புதிய இயக்குநர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பேன்” என்று உறுதியளித்தார்.
சென்னையில் பிறந்தவர்களுக்கும் சினிமாவில் முன்னேறுவது எளிதல்ல என்றும், தானும் பல ஆண்டுகள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு கடினமாக உழைத்தே இந்த நிலையை அடைந்ததாக பகிர்ந்தார்.
இசையமைப்பாளர் டி. இமானைப் பாராட்டிய அவர், தன்னுடைய முன்னணி கதாபாத்திர படங்களுக்கு தொடர்ந்து அவர் இசையமைக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்தார்.
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த யோகி பாபு, “கமல் சாருடன் மட்டும் இன்னும் நடிக்கவில்லை. விரைவில் அவருடன் நடிப்பேன் என்று நம்புகிறேன்” என்றார்.
மேலும், தனது வெற்றிக்கு முருகன் மீது உள்ள பக்தியே காரணம் என்றும், நகைச்சுவை நடிகராக ரசிகர்களின் அன்பை தொடர்ந்து பெறுவதற்காக அதே பாதையில் தொடர்ந்து பயணிப்பேன் என்றும் தெரிவித்தார்.

