ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி டேர்டெவில்ஸ் அணி.
இந்த இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய டெல்லி அணி 13.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் விளாசி வெற்றி பெற்றது.முன்னதாக, பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக முரளி விஜயும், மனன் வோராவும் களமிறங்கினர். இதில் 5 பந்துகளைச் சந்தித்த முரளி விஜய் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த ஷான் மார்ஷும் 13 ரன்களில் நடையைக் கட்டினார்.பின்னர் டேவிட் மில்லர் வந்தார். எனினும், 9 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 9 ரன்கள் எடுத்து அவர் பெவிலியன் திரும்பினார். அடுத்ததாக வந்த மேக்ஸ்வெல், ரன்கள் இன்றி அவுட் ஆனார்.தொடர்ந்து அக்ஸர் படேல் களமிறங்கிய நிலையில், மறுமுனையில் நீண்ட நேரம் நிலைத்து நின்ற மனன் வோரா 24 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரித்திமான் சாஹா, ஜான்சன் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். அக்ஸர் படேல் 11 ரன்கள் எடுத்து வீழ்ந்தார். மோகித் சர்மா 15 ரன்கள் எடுத்தார்.20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்தது பஞ்சாப் அணி. பர்தீப் சாஹு 18 ரன்களுடனும், சந்தீப் சர்மா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.டெல்லி அணி சார்பில், அமித் மிஸ்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். அதையடுத்து 112 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது டெல்லி அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக்கும், ஷ்ரேயாஸ் ஐயரும் வந்தனர். இதில் ஷ்ரேயாஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.டி காக் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். இந்நிலையில், 32 பந்துகளுக்கு 3 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்திருந்த சஞ்சு சாம்சன் அக்ஸர் படேல் பந்துவீச்சில் போல்டானார். அவரைத் தொடர்ந்து பவன் நெகி களமிறங்கினார். அதிரடியாக சிக்ஸர் விளாசி அணியின் வெற்றிக்கான ரன்களை அவர் எடுத்தார். இதையடுத்து 13.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து வென்றது டெல்லி. டி காக் 59 ரன்களுடனும், பவன் நெகி 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.பஞ்சாப் அணி சார்பில், சந்தீப் சர்மா, அக்ஸர் படேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
சுருக்கமான ஸ்கோர்
பஞ்சாப் இன்னிங்ஸ்
மனன் வோரா 32 (24)
பர்தீப் சாஹு 18 (12)
உபரிகள் 4
மொத்தம் (20 ஓவர்களில்
9 விக்கெட் இழப்புக்கு) 111
டெல்லி இன்னிங்ஸ்
டி காக் 59 யி(42)
சாம்சன் 33 (32)
உபரிகள் 10
மொத்தம் (13.3 ஓவர்களில்
2 விக்கெட் இழப்புக்கு) 113