புறநகர் ரெயில் நிலையங்களில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை என்றால், பொதுமேலாளர் நேரில் ஆஜராகவேண்டியது வரும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சட்டபஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலசுமார் 70 ரெயில் நிலையங்களை சுமார் 15 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். சென்னை மற்றும் புறநகரில் உள்ள 47 ரெயில் நிலையங்களை ஆய்வு செய்தபோது, 3 ரெயில் நிலையங்களில் மட்டுமே கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளன. 6 ரெயில் நிலையங்களில் இவை மோசமான நிலையில் உள்ளன. 38 ரெயில் நிலையங்களில் கழிவறை, குடிநீர் வசதிகள் எதுவும் இல்லை. இதுகுறித்து தெற்கு ரெயில்வே மண்டல பொது மேலாளருக்கு 2014-ம் ஆண்டு நவம்பர் 14-ந் தேதி கோரிக்கை மனு அனுப்பினோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை‘ என்று கூறியிருந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்து, ‘ரெயில் நிலையங்களில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துக்கொடுக்க 2 மாதம் காலஅவகாசம் வழங்குகிறோம். சில ரெயில் நிலையங்களில் கழிவறை உள்ளிட்ட வசதிகளை தற்காலிகமாக பயணிகளுக்கு செய்துக்கொடுக்கவேண்டும். அது சம்பந்தமான அறிக்கையை வருகிற ஏப்ரல் 15-ந் தேதி ரெயில்வே நிர்வாகம் தாக்கல் செய்யவேண்டும்‘ என்று கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அடிப்படை வசதிகள் இன்னும் செய்துக்கொடுக்கப்படவில்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரெயில்வே நிர்வாகத்துக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புகைப்படத்தை பார்க்கும்போது, ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை செய்துக்கொடுக்கும் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்று தெரிகிறது. எனவே, அடுத்தமுறை இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, ரெயில் நிலையங்களில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து முடித்து, அதுதொடர்பான புகைப்படங்களை ரெயில்வே நிர்வாகம் தாக்கல் செய்யவேண்டும்.அதேநேரம் ஒன்றை நாங்கள் (நீதிபதிகள்) தெளிவுப்படுத்துகிறோம். ஒருவேளை இந்த பணிகளை மேற்கொள்ளவில்லை என்றால், தெற்கு ரெயில்வே பொதுமேலாளரை நேரில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிடுவதை தவிர வேறு வழியில்லை. விசாரணையை ஜூலை 15-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.