வடகொரியா இன்று பரிசோதித்த ஏவுகணை தோல்வியை சந்தித்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது.வடகிழக்கு ஆசிய நாடுகளான தென்கொரியாவும், வடகொரியாவும் தங்களது ஆயுத பலத்தை நிலைநாட்ட பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.சக்திவாய்ந்த அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு மற்றும் அணுஆயுதங்களை நீண்டதூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் ஆகியவற்றை வடகொரியா அவ்வப்போது பரிசோதித்து வருகிறது. இதுதவிர, அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கட்டுப்பாட்டை மீறி வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நடந்துகொள்வதால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் எதிர்ப்பையும் சந்தித்து வருகிறார். இதனால் அந்த நாட்டின் மீது சில தடைகளும் விதிக்கப்பட்டது. இருந்தபோதும், பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தி மேலும் பதற்றத்தை உருவாக்கியது வடகொரியா.இதையடுத்து வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சமீபத்தில் ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. இந்த தடைகளை எல்லாம் பொருட்படுத்தாத வடகொரியா அடுத்தடுத்து கண்டம்விட்டு கண்டம்தாண்டி பாய்ந்துச் செல்லும் அணுஆயுத ஏவுகணைகளை கடந்த மாதம் அடுத்தடுத்து பரிசோதித்தது.எதிரி நாடுகளின் போர் விமானங்களை தாக்கி அழிக்கும் நவீனரக ராக்கெட்களை அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில் கடந்த 2-ம் தேதி வடகொரியா பரிசோதித்தது. மேலும், தென்கொரியா நாட்டு அதிபர் மாளிகையை ஏவுகணைகளின் மூலம் வடகொரியா தாக்கி அழிக்கும் சித்தரிப்பு வீடியோ காட்சிகளையும் வெளியிட்டது.இதற்கிடையே, தென்கொரியா ராணுவத்துடன் அமெரிக்க படைகள் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. தங்கள் நாட்டின்மீது தாக்குதல் நடத்தவே இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுவதாக வடகொரியா குற்றம்சாட்டி வருகிறது.இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னின் தந்தையும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான மறைந்த கிம் இல் சுங்-கின் பிறந்தநாள் இன்று (15-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளை ஏவுகணை சோதனைகளுடன் தீபாவளிபோல் கொண்டாடி மகிழ்வது வழக்கம்.அவ்வகையில், இன்று வடகொரியா பரிசோதித்த ஏவுகணை தோல்வியை சந்தித்ததாக தென்கொரியா உரிய ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது.