காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி
மேற்கு வங்காளத்தில் மூன்று கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில் காயம் அடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்கு வங்காளத்தில் 2–வது கட்டமாக 56 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடக்கிறது. காலை 7-மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சட்டசபைத் தேர்தல் நடைபெறும் மேற்கு வங்காளத்தில் அரசியல் கட்சி தொண்டர்கள் தேர்தல் அன்று சண்டையிட்டுக் கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. இன்று இரண்டாவது கட்டத் தேர்தல் நடைபெறும் தொகுதிகளிலும் இன்று வன்முறை அரங்கேறிஉள்ளது.பிர்புமில் வாக்குச்சாடி அருகே திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. தொண்டர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இச்சம்பவத்தில் 3 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். துருத் கிராமத்தில் பாரதீய ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டதில் 6 பேர் காயம் அடைந்து உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இரு கட்சியை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று போலீஸ் தெரிவித்து உள்ளது.இதற்கிடையே பாரதீய ஜனதா காயம் அடைந்த 6 பேரும் எங்களுடைய கட்சி தொண்டர்களே என்று கூறிஉள்ளது. பிர்பும் மாவட்டம் நானூர் தொகுதியின் சியன் கிராமம் மற்றும் துப்ராஜ்பூர் தொகுதியின் கான்கார்தாலா கிராமத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பார்வர்டு பிளாக் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்று வருகிறது. காலையில் சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. பின்னர் வாக்குப்பதிவு இயந்திரம் சரிசெய்யப்பட்டு, வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது