ஆர்.கே.நகர் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டபோது ஓபிஎஸ் அணியில் வேட்பாளராக போட்டியிட்டவர் மதுசூதனன், ஈபிஎஸ் அணியில் தினகரன் போட்டியிட்டார். தேர்தல் ரத்து செய்யப்பட்டவுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்தன. ஓபிஎஸ் அணிகள் இணைந்தாலும் உடனிருப்பவர்கள் யாருக்கும் உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்பது அனைவரின் குறைபாடாக உள்ளது.
இந்நிலையில் மீண்டும் ஆர்.கே.நகர் இடைதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. திமுக, நாம் தமிழர் கட்சியினர் அவர்களது முந்தைய வேட்பாளர்களையே அறிவித்து விட்டனர்.
அதிமுகவில் முந்தைய வேட்பாளர்களில் தினகரன் எதிரணிக்குச் சென்று விட்டார். மதுசூதனன் தற்போது எடப்பாடி அணியில் இருப்பதால் அவர் அதே தொகுதியை சேர்ந்தவர் என்பதாலும் அவருக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.மதுசூதனனும் வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடத் தயார் என்று அறிவித்திருந்தார். ஆனால் வேட்பாளரை அறிவிப்பதாக சொன்ன தேதியில் அறிவிக்க முடியாமல் எதிர்ப்பு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. விருப்ப மனு பெற்று ஆட்சிமன்றக்குழு தேர்வு செய்வது என்ற முடிவை எடுத்தனர்.நேற்று மதுசூதனன், கோகுல இந்திரா, ஆதிராஜாராம், பாலகங்கா உள்ளிட்ட பிரபலங்கள் விருப்பமனுவை பெற்றுச்சென்றனர். இதனால் மதுசூதனனுக்கு போட்டி கடுமையாகி உள்ளது.
இந்நிலையில், தஞ்சையில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க தேனியில் இருந்து திருச்சி வழியாக வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராக மதுசூதனனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த ஓபிஎஸ், ஆட்சி மன்றக்குழு கூடி முடிவு செய்யப்படும் என்று பதிலளித்துவிட்டுச் சென்றார்.