பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதி அருகே 150 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் பிடிப்பட்டது.பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் மாநிலம் வழியாக இந்தியாவுக்கு போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் எல்லைப் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில், நேற்று அதிகாலை இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் உள்ள பஞ்சாப் மாநிலம் பரோகா என்ற கிராமத்தில் ஹெராயினுடன் 2 பேரை அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்தனர். அவர்களிடம் 31½ கிலோ எடையுள்ள சுமார் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் இருப்பது தெரியவந்தது.விசாரணையில் அவர்கள் பிரகாஷ் என்கிற மின்ட்டு (வயது 24), அங்ரேஜ் சிங் (20) என தெரிந்தது. உடனே ஹெராயினை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.