கர்நாடகாவில், முன்னாள் முதல்வரும், பாஜக மாநில தலைவருமான எடியூரப்பா, தனக்குப் பரிசாக முன்னாள் அமைச்சர் முருகேஷ் நிரானி வழங்கிய சொகுசு காரை, அவரிடமே திரும்ப ஒப்படைத்தார்.முன்னாள் முதல்வர் எடியூரப்பா அண்மையில் பாஜக மாநில தலைவராக பதவி ஏற்றார். அவருக்கு ரூ.1.15 கோடி மதிப்பிலான சொகுசுகாரை பரிசாக முன்னாள் அமைச்சர் முருகேஷ் நிரானி வழங்கினார்.வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை இந்த காரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள எடியூரப்பா திட்டமிட்டிருந்தார். மாநிலம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளபோது, எடியூரப்பா சொகுசு காரில் சுற்றுப்யணம் மேற்கொள்வதா என பரவலாக சர்ச்சை கிளம்பியது. இதனையடுத்து முருகேஷ் நிரானி வழங்கிய சொகுசு காரை, இன்று அவரிடமே எடியூரப்பா திரும்ப ஒப்படைத்தார்.இது குறித்து எடியூரப்பா வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: எனது 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் செய்துள்ளேன். ஆனால் சொகுசு காரில்தான் செல்வேன் என்று எப்போதும் அடம் பிடித்ததில்லை.ஆனால், என் மீது உள்ள அன்பின் காரணமாக முருகேஷ் நிரானி சொகுசுக் காரை பயன்படுத்திக்கொள்ளுமாறு வழங்கினார். அதனை தொடர்ந்து சர்ச்சை கிளம்பியதால், அந்த காரை அவரிடமே திரும்ப ஒப்படைத்துவிட்டேன்.ரயிலில் சென்று வறட்சிப்பகுதிகளை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளேன். எனவே இனி சொகுசு கார் தொடர்பான விவாதத்தை தொடர வேண்டாம் என அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.