கோவையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பா.ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் கமிஷன் வேட்பாளர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அத்துடன் அவர்களது செயல்பாடுகளை தீவிரமாகவும் கண்காணித்து வருகிறது. தேர்தல் பிரசாரத்தின்போது, வழிபாட்டு தலங்களான கோவில், மசூதி, தேவாலயங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது என்றும், வாக்குகள் சேகரிக்க மதம் தடையில்லை என்றாலும், வழிபாட்டு தலங்களுக்குள் சென்று வேட்பாளர்களோ அரசியல் கட்சியினரோ வாக்குகள் சேகரிக்கக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இந்த நிலையில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசன் கோவை சித்தாபுதூர் அய்யப்பன் கோவிலுக்குள் சென்று, சாமி தரிசனம் செய்துவிட்டு, அங்கு வந்த மக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அத்துடன் அங்கு இருந்த கோவையில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்களிடம் மலையாளத்தில் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களையும் வழங்கியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்த தேர்தல் அதிகாரிகள், கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு உத்தரவிட்டனர். இதைதொடர்ந்து போலீசார் வானதி சீனிவாசன் மீது தேர்தல் விதிமுறைகளை மீறி வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.