அருப்புக்கோட்டையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர்(தனி), ராஜபாளையம், திருச்சுழி, சாத்தூர், அருப்புக்கோட்டை, சிவகங்கை, மானாமதுரை (தனி), பரமக்குடி (தனி), ராமநாதபுரம், முதுகுளத்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் 14 வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசியதாவது:- 2011 தேர்தல் அறிக்கையில் 54 தலைப்புகளின் கீழ் அறிவிக் கப்பட்டிருந்த நூற்றுக்கணக் கான வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம். அதோடு மட்டுமல்லாமல், நீங்கள் எதிர்பார்க்காத பல திட்டங்களை; நீங்கள் நினைத்துக்கூடப் பார்க்காத பல திட்டங்களை நான் செயல்படுத்தி உள்ளேன்.இவ்வளவு தான் என்று கருதிவிடாதீர்கள். நீங்கள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத, நீங்கள் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத இன்னும் ஏராளமான திட்டங்களை உங்களுக்காக செய்வேன் என்ற வாக்குறுதியை இந்த நேரத்தில் உங்களுக்கு அளிக்கிறேன்.பாக் நீரிணைப் பகுதியில் கடல் எல்லையை தாண்டி தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர் என்று குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் பிரச்சினை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போதெல்லாம் அவர்களை விடுதலை செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் நான் எடுத்து வருகிறேன்.
, 1974-ம் ஆண்டு இந்திய இலங்கை உடன்பாட்டின்படி இலங்கைக்கு அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசால் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. இதைத் தடுப்பதற்கு தேவையான எந்தவித நடவடிக்கையும் கருணாநிதி அப்போது எடுக்கவில்லை. கச்சத்தீவுப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமும் தீர்வு காணப்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த வழக்கில் சாதகமான தீர்ப்பு பெற்று மீனவர்கள் பயன் பெற வேண்டும் என்பது தான் என்னைப் பொறுத்தவரை இந்த பிரச்சினையில் என்னுடைய நிலைப்பாடு. எனவே தான் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் இரு நாட்டு மீனவர்களிடையே சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதே ஆண்டு மே மாதம் கொழும்பு நகரில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் பாரம்பரிய மீன்பிடி உரிமை வலியுறுத்தப்பட்டதுடன், தமிழக மீனவர் மீதான தாக்குதல்கள் கைவிடப்பட வேண்டும் என்றும், கைது செய்யப்படும் மீனவர்கள் படகுகளுடன் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும், இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் மீன்பிடி முறைகள் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இருப்பினும் எந்த முடிவுகளும் எட்டப்படவில்லை. இந்த முயற்சிகள் தொடர்ந்து நடத்தப்படும். அத்துடன், உச்சநீதிமன்றத்தின் மூலம் கச்சத்தீவு மீட்கப்பட்டு பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் நிலைநாட்டப்படும் என்பதை நான் உறுதிபட இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் உரையாற்றினார்.