மேற்கு வங்காள மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, நேற்று முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ரகுநாத்கஞ்ச், கந்தி ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசினார்.
அவர் பேசியதாவது:-5 ஆண்டுகளுக்கு முன்பு, மம்தாவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. மாற்றத்தை கொண்டு வருவதாகவும், வளர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், வேலைவாய்ப்பை அளிப்பதாகவும், சட்டம்-ஒழுங்கை காப்பதாகவும் மம்தா வாக்குறுதி அளித்தார். அதனால் அவருக்கு ஆதரவு அளித்தோம். ஆனால், பதவி ஏற்ற மறுநாளே அவர் மாறிவிட்டார். வாக்குறுதிகளை மறந்து விட்டார்.தொழிற்சாலைகள் அமைப்பதாகவும், 70 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாகவும் மம்தா உறுதி அளித்தார். ஆனால், ஒரு தொழிற்சாலை கூட அமைக்கவில்லை.பிரதமர் மோடியும் இதே போன்று இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என்ற கோஷத்துடன் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை தொடங்கினார். ஆனால், வேலை அளிப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.ஊழலை ஒளிப்பதாகவும் மம்தா வாக்குறுதி அளித்தார். ஆனால், அவர் கண் எதிரில் சாரதா ஊழல், திரிணாமுல் எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் வெளியானபோது, அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் நேரமான இப்போது நடவடிக்கை எடுப்பதாக கூறும் மம்தா, ஏன் முன்பே நடவடிக்கை எடுக்கவில்லை?ஆனால், காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த ஊழல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் கூட்டணி நிச்சயம் ஆட்சிக்கு வரும். அதற்காக, இரு கட்சி தொண்டர்களும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும்.என்றார்.