அஸ்லான் ஷா ஆக்கி: இறுதிவரை முன்னேறிய இந்தியா ஆஸ்திரேலியாவிடம் மீண்டும் பணிந்தது

Azlan-Shah-HockeyTurn-back-to-IndiaAustralian-team

அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4–0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை மீண்டும் சாய்த்து சாம்பியன் பட்டத்தை வென்றது. 7 அணிகள் இடையிலான 25–வது சுல்தான் அஸ்லான் ஷா ஆக்கி தொடர் மலேசியாவின் இபோக் நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை சந்தித்தது.இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியினர் ஆரம்பம் முதலே மின்னல் வேக ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆஸ்திரேலிய அணியினரின் அதிரடி ஊடுருவலை தடுக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினார்கள். தடுப்பு ஆட்டத்திலேயே அதிகம் கவனம் செலுத்திய இந்திய அணியினர் எதிரணியின் கோல் எல்லையை எட்டுவது அரிதானதாக இருந்தது. தொடக்கம் முதல் கடைசி வரை ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி 4–0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி 9–வது முறையாக சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கிரேக் தாமஸ் 25–வது மற்றும் 35–வது நிமிடத்திலும், மேட் கோட்ஸ் 43–வது மற்றும் 57–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்த போட்டி தொடரில் தோல்வியை சந்திக்காத ஆஸ்திரேலிய அணி லீக் ஆட்டத்தில் 5–1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்து இருந்தது. தோல்வி கண்ட இந்திய அணி வெள்ளிப்பதக்கத்துடன் திருப்திபட வேண்டியதானது.

முன்னதாக நடந்த வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் நியூசிலாந்து–மலேசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பான இந்த ஆட்டம் 3–3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. இதனால் வெற்றி–தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்–அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் மலேசிய அணி வீரர் பிட்ரி சாரி கடைசி (5–வது) வாய்ப்பை வீணடித்தார். இதனால் நியூசிலாந்து அணி பெனால்டி ஷூட்–அவுட்டில் 5–4 என்ற கோல் கணக்கில் மலேசியாவுக்கு அதிர்ச்சி அளித்து வெண்கலப்பதக்கத்தை வென்றது. மலேசியா அணி 4–வது இடம் பெற்றது.5–வது இடத்துக்கான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 3–1 என்ற கோல் கணக்கில் கனடாவை தோற்கடித்து 5–வது இடத்தை சொந்தமாக் கியது. கனடா 6–வது இடம் பெற்றது. ஒரு வெற்றியும் பெறாத ஜப்பான் அணி கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது