கால் டாக்சி ஓட்டுநர்கள் போராட்டம்

கமிஷன் தொகையை அதிக அளவில் அபகரித்து கொள்வதாக கால் டாக்சி நிறுவனங்கள் மீது கால் டாக்சி ஓட்டுனர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர். தமிழகத்தில் இன்று ஓலா,ஊபர், யூடூ போன்ற கால் டாக்சி நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. நகர் பகுதிகளில் அதிகமான மக்கள் கால் டாக்சிகளையே உபயோகிக்கின்றனர். இதனை பயன்படுத்தி கொண்டு கால் டாக்சி நிறுவனங்கள் வாடிக்கையாளர் அளிக்கும் கட்டண தொகையில் 27% தொகையை எடுத்துக் கொள்வதாகவும், இதனால் தங்களின் வருமானம் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் கால் டாக்சி ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், போதிய வருமானம் இல்லாததாலும், கடன் தொல்லையாலும் 3 கால் டாக்சி ஓட்டுநர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் கூறினர்.

கார்ப்பரேட் கையில் சென்று விட்ட கால் டாக்சி தொழிலில் பயண கட்டணம் மற்றும் கமிஷன் தொடர்பாக அரசே கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி இன்று சென்னையில் கால் டாக்சி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேப்பாக்கம் மைதானம் அருகே நடைபெறும் இந்த போராட்டத்தில் கால் டாக்சி ஓட்டுநர்கள், டூரிஸ்ட் வாகன ஓட்டுனர்கள் உட்பட 40 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக இருப்பதால் அதனையும் மாற்றி அமைத்திட வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.