Temple Monkey மூலம் புகழ் பெற்ற விஜய் வரதராஜ், “பல்லுபடாம பாத்துக்கோ’” படத்தை இயக்கியதன் மூலம் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில், அடுத்ததாக ‘குத்துக்கு பத்து’ என்ற இணையதொடரை உருவாக்க உள்ளார். இந்த இணைய தொடரை D Company சார்பில் AKV துரை தயாரிக்கிறார். இந்தத் தொடரில் ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், விஜய் வரதராஜ், சாரா, அப்துல், அகஸ்டின், திலீபன், பத்ரி, செங்கி வேலு, திவாகர், ஜானி, பிக் பாஸ் சம்யுக்தா மற்றும் பலர் நடிக்கின்றனர். 8 அத்தியாயங்கள் கொண்ட தொடராக இத்தொடர் உருவாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை இயக்குநர் சுசீந்திரன் அவர்கள் கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.
இயக்குநர் விஜய் வரதராஜ் தொடர் குறித்து கூறியதாவது…
இன்றைய இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில், அனைத்து அம்சங்களும் நிறைந்த நகைச்சுவை தொடர் தான் இது. அரசு வழிகாட்டியுள்ள அனைத்து உடல்நலம் மற்றும் சுகாதார நெறிமுறைகளுடன், “குத்துக்கு பத்து” தொடரின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளோம். இத்தொடரின் ஒவ்வொரு குழு உறுப்பினரும் தடுப்பூசிகளின் முழுமையான அளவை எடுத்து முடித்துள்ளனர். இது பாதுகாப்பான படப்பிடிப்பிற்கு முழு உத்தரவாதத்தை அளித்துள்ளது. இதனை முழுமையாக செயல்படுத்தியதற்காக தயாரிப்பாளர் AKV துரை அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். அவருடன் இணைந்து இத்தொடரை உருவாக்குவது மகிழ்ச்சி. இத்தொடரில் மிகத் திறமை வாய்ந்த நடிகர்கள் குழு பங்கேற்கிறது. எந்த ஒரு பாத்திரத்திலும் தனித்து தெரியும் திறன் பெற்ற ஆடுகளம் நரேன் சார், போஸ் வெங்கட் சார் போன்ற பெரும் ஆளுமைகளுடன் இணைந்து பணியாற்றுவது பேரின்பம் தரும் அனுபவம். இத்தொடரில் அவர்களது கதாப்பாத்திரம் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும் என்றார்.
D Company சார்பில் AKV துரை கூறியதாவது…
Temple Monkey மூலம் புகழ் பெற்ற விஜய் வரதராஜ், கதை சொல்லலில் தனது புதுமையான அணுகுமுறையால், அனைத்து தரப்பினரையும் மகிழ்விப்பதில் தனது திறமையை ஏற்கனவே நிரூபித்துள்ளார். அவர் குத்துக்கு பத்து தொடரின் திரைக்கதையை விவரித்தபோது, நிகழ்ச்சி முழுவதும் 100% பொழுதுபோக்கு தன்மையுடனும், அனைவரும் சிரித்து, மகிழ்ந்து கொண்டாடும் வகையிலும், இருப்பதை உணர்ந்தேன் . குறிப்பாக, இது இளம் பார்வையாளர்களுக்கு பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என்றார்.
8 அத்தியாயங்கள் கொண்ட இத்தொடரை விஜய் வரதராஜ் எழுதி இயக்குகிறார். ஜகதீஷ் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, பாலமுரளி பாலா இசையமைக்கிறார். சாந்தோஷ் செந்தில் (Shifty) படத்தொகுப்பு செய்ய, மதன் குமார் கலைஇயக்கம் செய்கிறார். டேஞ்சர் மணி சண்டைப்பயிற்சிகளை செய்ய, முகமது சுபையர் ஆடை வடிவமைப்புகளை செய்கிறார், வினோத் சுகுமாரன் மேக்கப்பை கவனிக்க, சேது ராமலிங்கம், சரத் நிவாஷ், மற்றும் KV மோத்தி ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். D Company சார்பில் AKV துரை இத்தொடரை தயாரிக்கிறார்.