மனதை நெகிழ வைக்கும் உணர்வுப்பூர்வமான படங்களை கொடுக்கக்கூடிய இயக்குநர் ராம் மற்றும் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட அதேசமயம் தரமான கலைப்படைப்புகளை ரசிகர்களுக்கு பரிசளித்து வரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் கூட்டணியில் தயாராகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழு மலை’.
நிவின்பாலி கதாநாயகனாக, அஞ்சலி கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் சூரி நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்
‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இன்னொரு பக்கம் உலக அரங்கில் தனது பயணத்தை உத்வேகமும் உற்சாகமுமாக துவங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த பிப்ரவரியில் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பிக் ஸ்கிரீன் போட்டி பிரிவில் கலந்துகொண்டு பெரும் வரவேற்பையும் முத்திரையையும் பதித்தது.
தற்போது ஏப்ரல் 19 முதல் 26 வரை நடைபெற உள்ள 46வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள ‘ஏழு கடல் ஏழுமலை’ அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளது. இந்த விழாவில் ‘பிளாக் பஸ்டர்ஸ் ஃப்ரம் அரௌண்ட் தி வேர்ல்ட்’ (Blockbusters from around the world) என்கிற பிரிவில் இப்படம் திரையிடப்பட இருக்கிறது.
இந்த மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்து கொண்டுள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறும்போது, “சமகால சினிமாவில் சிறந்த உலக திரைப்படங்களின் வரிசையில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் தேர்வாகி இருப்பது இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் திறமைக்கும் கடின உழைப்பிற்குமான சான்றாகும். ‘ஏழு கடல் ஏழு மலை’, அதன் அழுத்தமான திரைக்கதை மற்றும் பிரமிக்கத்தக்க காட்சி அமைப்பினால் பார்வையாளர்களின் உள்ளங்களை கவர்ந்துள்ளது.
நிவின்பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோரின் அசாதரணமான நடிப்பும், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும், ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும், உமேஷ் யாதவ்வின் கலை வடிவமைப்பும், ஸ்டண்ட் சில்வாவின் சண்டை காட்சிகளும், மதன் கார்க்கியின் பாடல் வரிகளும் உலகளாவிய பாராட்டுகளைப் பெற்றுள்ளது. தமிழ் புத்தாண்டில் இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.