கல்வித்துறை செயலாளர் நியமனம் மூலம், அமைச்சர் செங்கோட்டையன் செயல்பாடுகளுக்கு செக் வைத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. பள்ளி கல்வித்துறையில் ஆறு வருட காலம் அசைக்க முடியாதவராக வலம் வந்த ஐஏஎஸ் அதிகாரி சபிதா திடீரென மாற்றப்பட்டுள்ளது தலைமைச் செயலக வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சபிதா பள்ளி கல்வித் துறை செயலாளராக இருந்த கடந்த 6 வருடங்களில் இத்துறையில் 6 அமைச்சர்கள் மாறிவிட்டார்கள். ஆனால் அவர் மாறவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுபவர் சபிதா. அந்த பிம்பம், சபிதாவுக்கு வசதியாக இருந்தது. அவரை கண்டாலே தலைமைச் செயலகத்திலுள்ள அத்தனை அதிகாரிகளும் நடுங்கிக்கொண்டிருந்தனர்.
அதனால் இந்த துறையில் இவரோட ஆட்டம் அதிகமா இருந்ததாக கூறப்படுகிறது. அமைச்சர்களே இவர் சொல்வதை அப்படியேத்தான் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு நிலைமை தலைகீழ். இந்த நேரத்தில்தான் பள்ளி கல்வி அமைச்சராக செங்கோட்டையன் பதவிக்கு வந்தார். ஆனாலும் சபிதா பழைய நினைப்பிலேயே அதிகம் ஆட்டம் போட்டுள்ளார். இதனால் முதல்வர் எடப்பாடி மூலம் சபிதாவை தமிழ்நாடு சிமென்ட் கழகத்துக்கு மாற்றியுள்ளார் செங்கோட்டையன்.
ஆனால் அதில்தான் ஒரு செக் சேர்த்து வைத்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. இத்துறையின் செயலாளராக உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கண்டிப்புக்கு பெயர் போன அதிகாரி. மிகவும் நேர்மையானவர் என்று பெயர் எடுத்தவர். இவரை மீறி அமைச்சரால் ஆசிரியர் நியமனம், கவுன்சலிங் விவகாரத்தில் தனிப்பட்ட முடிவை எடுக்க முடியாது என்பது எடப்பாடியார் கணக்கு. உதயச்சந்திரன் நியமனத்தால் அமைச்சருக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டது. இதனால் பலம் வாய்ந்த அமைச்சராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனால் வலம் வர முடியாது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.