கேரள மாநிலம் மலப்புரம் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான அகமது (வயது78), நேற்று முன்தினம் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது திடீரென மயங்கி விழுந்தார். டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் மாரடைப்பு காரணமாக நேற்று அதிகாலையில் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். இதைத் தொடர்ந்து அவரது உடல் விமானம் மூலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு நேற்று பகல் கொண்டு வரப்பட்டது. இன்று காலை முதல் கண்ணூரில் உள்ள நகரசபை மைதானத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முன்னாள் மத்திய மந்திரிகள் ஏ.கே. அந்தோணி, அகமது படேல், வயலார் ரவி எம்.பி. உள்பட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், அகமதுவின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். முன்னாள் முதல்-மந்திரி அச்சுதானந்தன் மற்றும் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
அஞ்சலி நிறைவடைந்ததையடுத்து அவரது உடல் தேசியக்கொடி போர்த்தப்பட்டு, இன்று பிற்பகல் ஜூம்மா மசூதிக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. அப்போது, கேரள மந்திரி கடனப்பள்ளி ராமச்சந்திரன், மாநில காங்கிரஸ் தலைவர் வி.எம்.சதீரன், கண்ணூர் எம்.பி. பி.கே.ஸ்ரீமதி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் என ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, அகமதுவின் உடல் முழு அரசு மரியாதையுடன் அங்கு அடக்கம் செய்யப்பட்டது.
