ரசிகர்கள் கல்லெறிவர்களா..? பூக்களை வீசுவர்களா..?; ‘x வீடியோஸ்’ இயக்குனர் எதிர்பார்ப்பு
இயக்குநர் ஹரியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சஜோ சுந்தர் ‘x வீடியோஸ்’ என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை கலர் ஷாடோஸ் எண்டெர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கதையின் இயல்பு தன்மைக்காக அஜய்ராஜ், பிரபுஜித், ஆஹிருதி சிங், ரியாமிக்கா, ஷான் என முற்றிலும் புதுமுகங்களின் நடிப்பில் படம் உருவாகியுள்ளது.படத்தில் பாடல் காட்சிகளோ சண்டைக் காட்சிகளோ கிடையாது. தமிழ், இந்தி என இரு மொழிப் படமாக இது உருவாகியுள்ளது
நாளை ஜூன்-1ஆம் தேதி படம் வெளியாவதை முன்னிட்டு இந்தப்படம் பற்றிய தகவல்களையும் படம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்களுக்கான பதில்களையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் இயக்குனர் சஜோ சுந்தர்.
“இன்று இணையதளத்தில் நிர்வாணப்படங்களை வெளியிட்டு சமூகத்தை சீரழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது ‘x வீடியோஸ்’ என்கிற இணையதளம்.. இந்த இணையதளம் மூலம் மக்களின் வாழ்க்கையில் எப்படி இவர்கள் விளையாடுகிறார்கள் என்பதைத்தான் இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறோம். அந்தவகையில் இது முழுக்க முழுக்க ‘x வீடியோஸ்’ என்கிற இணையத்தளத்திற்கு எதிரான படம்.. ரசிகர்களை ஈர்க்கும் விதமான தலைப்பாக இருக்கட்டும் என இந்த டைட்டிலை வைத்திருந்தாலும் கூட, ‘x’ என்றால் தவறு என்கிற கருத்தைத்தான் இதில் சொல்லியிருக்கிறோம். இது முழுக்க பெண்களுக்கான விழிப்புணர்வு படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்தப்படத்தில் நிர்வாண கடசிகள் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுவது முற்றிலும் தவறு.. அரை நிர்வாண காடசிகள் இடம்பெற்றுள்ளன என்றாலும், அவை கூட கதையின் தேவை கருதி தானே தவிர, எதுவும் வலிந்து திணிக்கப்படவில்லை. இந்தப்படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்கள் யாரும் இரண்டாந்தர படங்களில் நடிக்கும் நடிகர்கள் அல்ல.. எல்லோருமே கௌரவமான குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்..அவர்களுக்கும் நடிக்கும்போது ஆரம்பகட்ட சங்கோஜங்கள் இருந்தன. ஆனால் மக்களுக்கெதிராக நடக்கும் இதுபோன்ற தவறுகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தினால் கதைக்காக மட்டுமே அவர்கள் இந்தப்படத்தில் முழு மனதுடன் ஒப்புக்கொண்டு நடித்துள்ளார்கள்.
இந்த படத்தை சென்சார் போர்டிலுள்ள 7 பெண் உறுப்பினர்களும் பார்த்தார்கள். குறிப்பாக சென்சாரில் முக்கிய பொறுப்பில் உள்ள நடிகை கௌதமி இந்தப்படத்தை பாராட்டியதோடு, இதுபோன்ற படம் வெளிவரவேண்டும் என வாழ்த்து சொல்லி இந்தப்படத்தை அனுமதித்தார்கள். இன்னும் நிறைய தகவல்களுடன் இந்தப்படத்தின் 2ஆம் பாகத்தையும் நீங்கள் எடுக்கவேண்டும் என ஊக்கமும் கொடுத்தார். இந்தப்படத்தை இந்த அளவிற்கு மக்கள் பார்த்தல் போதுமானது என கூறி, ஒரு சில காட்சிகளை மட்டும் சென்சாரில் விதிகளுக்கு உட்பட்டு நீக்கினார்கள். மற்றபடி இன்றைய சூழலில் அவசியம் சொல்லப்படவேண்டிய கருத்துள்ள முக்கியமான படம் இது என்று பாராட்டினார்கள்.
கண்ணுக்குத் தெரியாத பிரம்மாண்ட சைபர் உலகம் நமக்குத் தெரியாமல் இயங்கி வருகிறது. அது நம் கண்ணுக்குத் தெரியவில்லையே தவிர, நம்மை அது 24 மணி நேரமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் அதன் கண்ணில் நமது அந்தரங்கம் சிக்கிக் கொண்டால் எல்லாமே பகிரங்கம் தான். நம் வீட்டில் குளியல் அறையிலோ படுக்கையறையிலோ நம் ஸ்மார்ட் போனை வைத்து விட்டால் போதும் அதிலுள்ள வசதி மூலம் எங்கிருந்தோ ஒருவன் உங்கள் கேமராவை இயக்க முடியும். படம் பிடிக்க முடியும்.
இந்த அதீத தொழில்நுட்ப பயங்கரம் யாருக்கும் தெரிவதில்லை. இதற்கெல்லாம் பின்னணியில் இந்த ‘x வீடியோஸ்’ என்கிற இணையத்தளத்திற்கு பக்கபலமாக செயல்படுவை மொபைல் ‘ஆப்’கள் (Apps ) தான்.. இன்று தொட்டதற்கெல்லாம் ஆப் உபயோகப்படுத்துகிறார்கள்.. அவற்றை உங்கள் மொபைல் போனில் உள்ளீடு செய்யும்போதே உங்கள் போனில் உள்ள உங்களது அனைத்து தகவல்களையும் எடுத்துக்கொள்வோம் என கூறி உங்கள் அனுமதியுடன் தான் அவர்கள் உங்கள் அந்தரங்கத்தில் கால் வைக்கிறார்கள். மிகப்பயங்கரமான தகவல் திருட்டை உங்கள் அனுமதியுடனேயே அவர்கள் செய்கிறார்கள் என்பதுதான் இதில் வேதனையான விஷயம்.. இதன் பின்னணியில் கோடிக்கணக்கில் வர்த்தகம் இருக்கிறது.. இன்று தொண்ணூறு சதவீதம் மொபைல் ‘ஆப்’கள் (Apps ) பின்னணியில் இந்த ‘x வீடியோஸ்’ என்கிற இணையதளம் முக்கிய கருவியாக இருக்கிறது.
பொத்தாம் பொதுவாக இந்த குற்றச்சாட்டை நான் வைக்கவில்லை.. இல்லை, நான் சொல்வது தவறு என சொல்லிக்கொண்டு யாரையாவது வரச்சொல்லுங்கள் பார்ப்போம்.. அப்படி இதுவரை இந்த கருத்தை எதிர்த்து ஒருவரும் வரவில்லை. வரவும் மாட்டார்கள்.. காரணம் அதுதான் உண்மை.
இயக்குனராக எனக்கு இது முதல் படம்.. இந்தப்படத்தின் மூலம் வருமானம் சம்பாதிக்கவேண்டும் என்பது என் நோக்கம் கிடையாது.. இந்தப்படத்திற்கு நான் செலவழித்த பணம் திரும்ப வந்தாலே, அதுவே போதுமானது.. இந்தப்படத்தை பார்க்கும் மக்கள் இதன்பின்னராவது கொஞ்சம் உஷாராகி விடுவார்கள் என்றால் அதுதான் எனக்கு லாபம்.
இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்துடன் இதனை ஒப்பிட வேண்டாம்.. அந்தப்படத்தை பார்ப்பதால் சும்மா சிரித்துவிட்டு போவதை தவிர வேறு என்ன லாபம் இருக்கிறது..? ஆனால் இந்த ‘x வீடியோஸ்’ படத்தை பார்க்கிற ரசிகர்களுக்கு இதில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு தகவலும் லாபம்.
இது ஆபாசப்படம் அல்ல.. ஆபாசத்தை பற்றிய படம்.. அசிங்கங்களை பேசுவது அசிங்கம் என் நாம் நினைத்துக்கொள்வதால் தான் நாட்டில் பல அசிங்கங்கள் நடக்கின்றன என்பதை குறிப்பிடுகிற படம் இது.. இதுவரை படம் பார்த்த அனைவரிடமும் இருந்து பாராட்டுக்கள் மட்டுமே குவிந்துள்ளன. இனி படத்திற்கான வரவேற்பு மக்கள் கையில் தான் இருக்கிறது.. அவர்கள் என் மீது கல்லெறிகிறார்களா இல்லை பூக்களை வீசுகிறார்களா என்பதை அறிந்துகொள்ள காத்திருக்கிறேன்..