பெண்களுக்கான பாதுகாப்பு மட்டும் காவல்துறையின் பணி என்று இல்லாமல் இந்த சமூகத்தில் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும், அவர்களுக்கான தகுந்த வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தூத்துக்குடி மாவட்டம் காவல்துறையின் சார்பில் பெண் குழந்தைகள் சந்திப்பு என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. கோவில்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இதன் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகேந்திரன் கலந்து கொண்டு பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, பெண்கள் விழிப்புணர்வு புத்தகங்களை அரசு மகளிர் விடுதிக்கு வழங்கியது மட்டுமின்றி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகளுடன் கலந்துரையாடியனர்.
இந்த திட்டம் குறித்து அவர் கூறுகையில் மாவட்டத்தில் உள்ள 7 மகளிர் காவல்நிலையங்கள் மூலமாக இந்த திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும், ஒவ்வொரு காவல்நிலையதின் எல்லைக்குள்ள பகுதிக்கு பெண்காவலர்கள் நேரில் சென்று பெண்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேற்றம் அடைவதற்கான ஆலோசனைகளும், அதற்கான வாய்ப்புக்களும் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். காவல்துறையினர் இந்த முயற்சி பெண்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை புதிய உற்சகாத்தினையும் கொடுத்துள்ளது. நிகழ்ச்சியில் டி.எஸ்.பி.முருகவேல், ஆய்வாளர்கள் பவுல்ராஜ், ஸ்டெல்லாபாய் மற்றும் காவல்துறையினர், பள்ளி, கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.