ரேவதி, பார்வதி, பத்மப்ரியா, மஞ்சு வாரியர் கலந்து கொண்ட திரைத்துறை பெண்கள் கூட்டமைப்பின் இரண்டாம் ஆண்டு விழா!


திரைத்துறை பெண்களின் கூட்டமைப்பான “வுமன் இன் சினிமா கலெக்டிவ்” ( Women in Cinema Collective / WCC) அமைப்பின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா கேரளாவில் எர்ணாகுளம் நகரில் நடைபெற்றது.

ரேவதி, பார்வதி, பத்மப்ரியா, மஞ்சு வாரியர், அஞ்சலி மேனன் உள்பட மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி திரைத்துறை என இந்தியா முழுவதிலும் இருந்து பெண் படைப்பாளிகளும் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் தொழில் நுட்ப கலைஞர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தென்னிந்திய திரைத்துறைப் பெண்கள் மையம் சார்பாக இயக்குநர் மாலினி ஜீவரத்னம், ஏஞ்சல் பிலோமினா, ஈஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

சினிமாவில் பெண்கள், நடிகையர்களாக மட்டுமல்லாது துணை நடிகைகள், பாத்திரம் கழுவும் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள், பின்னனி நடன கலைஞர்கள் என எல்லாருக்கும் நிகழும் ஒரே மாதிரியான சுயமரியாதை இழப்பையும் அறமற்று பெண்களை உடல் சுரண்டல் செய்யும் சம உரிமையற்ற ஆண் மைய சினிமாவின் ஆதிக்க போக்கு போன்ற பல விசயங்களைப் பற்றி விவாதித்துள்ளனர்.

இயக்குநர் பா.இரஞ்சித், சமூக செயற்பாட்டாளர் அஜிதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு உரையாற்றினர்.

“உடல் உணர்வு உழைப்பு சுரண்டலற்ற பெண் விடுதலைக்கான சம உரிமை பேசும் பெண்களுக்கான சினிமா Collective ஆக WCC யின் இந்த 2 நாள் நிகழ்வு குழு விவாதங்களால் நிறைந்தது. சக பெண்ணாக வேலை களங்களில் சக பெண் படைப்பாளிகளை கலைஞர்களை புரிந்து கொள்ள உதவும் பயிலரங்கமாக இருந்தது”, என்கிறார் தமிழ் திரையுலகில் இருந்து பங்கேற்ற மாலினி ஜீவரத்னம்.

திரைத்துறை பெண்கள் மட்டுமல்லாது, திரைத்துறையில் உள்ள திருநங்கையர், திருநம்பியர், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பல தீர்மானங்களை இந்த கூட்டமைப்பினர் முன்மொழிந்துள்ளனர்.

திரைத்துறை பெண்களின் ஒன்று கூடல் மிகவும் திருப்தியாக அமைந்த மகிழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது.