சீதக்காதி படத்துக்கு அனைத்து தரப்பில் இருந்தும் கிடைக்கும் அபரிமிதமான வரவேற்பால் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். படக்குழுவின் முக்கிய நோக்கமே ‘மேடை நாடக உலகம்’ மற்றும் அதன் கலைஞர்களுக்கு அர்ப்பணம் செய்வது தான். யாருக்காக எடுக்கப்பட்டதோ அவர்களை சென்று சேர்ந்திருக்கிறது படம். எனினும், அவர்கள் தனித்துவமான கருத்துடைய ஒரு திரைப்படத்தை தயாரிக்க கிடைத்த அதிர்ஷ்டத்தையே முழுமையான மகிழ்ச்சியாக நினைக்கிறார்கள். ஹாலிவுட்டுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய கதையை எடுத்தது பெருமை. இந்த அற்புதமான படைப்பை உருவாக்கிய இயக்குனர் பாலாஜி தரணீதரன் மற்றும் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பிய, நாடக கலைஞர்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ள, அதன் வழியாக இன்று தமிழ் சினிமாவில் “மக்கள் செல்வன்” ஆக மாறியுள்ள விஜய் சேதுபதி ஆகியோர் மீது மிகுந்த மரியாதையில் உள்ளனர் தயாரிப்பாளர்கள்.
75 வயதுள்ள நாடக கலைஞராக விஜய் சேதுபதி நடித்த சீதக்காதி டிசம்பர் 20ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. கோவிந்த் வசந்தா இசையமைக்க, சரஸ்காந்த் டி.கே. ஒளிப்பதிவு செய்திருந்தார்.
விஜய் சேதுபதி “சீதக்காதி”யில் தான் வெறும் 40 நிமிடங்கள் தான் தோன்றுவேன் என வெளிப்படையாக அறிவித்திருந்தது பார்வையாளர்களை துல்லியமான மனநிலையுடன் தயார்படுத்தியிருந்தது என தயாரிப்பாளர்கள் நம்புகின்றனர். மக்கள் தியேட்டருக்கு வருவதற்கு முன்பே இத்தகைய வழிகாட்டும் நடைமுறைகள் தூய சினிமாவுக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.