யார் நீங்க? ரஜினியைப் பார்த்து கேட்ட இளைஞர்

யார் நீங்க? ரஜினியைப் பார்த்து கேட்ட இளைஞர்

சிகிச்சை பெற்று வருபவர்களில் ஓர் இளைஞர் ரஜினியைப் பார்த்து, “யார் நீங்க?” என்று அந்த வீடியோவில் கேட்கிறார். அதற்கு ரஜினியோ “நான் ரஜினிகாந்த்” என்று சொல்கிறார். “  ரஜினிகாந்த்  என்பது தெரிகிறது, எங்கேயிருந்து வருகிறீர்கள்?” என அந்த இளைஞர் மீண்டும் கேட்கிறார். அதற்கு நடிகர் ரஜினிகாந்த், “நான் சென்னையிலிருந்து வருகிறேன்” என்று சொன்னதும், “சென்னையிலிருந்து வருவதற்கு நூறு நாள் ஆகுமா?” என அந்த இளைஞர் கேட்க, ரஜினி மிகவும் இறுக்கமான முகத்துடன் சிரித்தபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்கிறார்.

அந்த இளைஞருடைய பெயர் சந்தோஷ் என்பதும், `அனைத்துக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பின் தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளர்’ என்பதும் தெரியவந்தது. போலீஸாரின் தாக்குதலில் பலத்தக் காயமடைந்து தலையில் பத்துத் தையல்கள் போடப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

“தூத்துக்குடியில் நாங்கள் நூறு நாள்களாகப் போராடினோம். அப்போதெல்லாம் நடிகர் ரஜினிகாந்த் எங்களைச் சந்திக்கவோ, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவோ வரவில்லை. போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர். பலர் மரணத் தருவாயில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் நடந்து இன்றோடு எட்டு நாள்கள் ஆகின்றன. இத்தனை நாள்களாக, இந்தச் சம்பவம் பற்றி ரஜினிகாந்த் வாய்திறக்கவில்லை. பாதிப்புக்குள்ளானவர்களை வந்து சந்திக்கவும் இல்லை. இன்று எதற்காக வருகிறார்?

அதுவும் ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்ட பிறகு அவர் வந்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூடவில்லை என்றால் ஒருவேளை அவர் வந்திருக்கமாட்டார். தற்போது அவர் வந்ததன் பின்னணியில் மிகப்பெரிய காரணம் இருக்கிறது. இன்னும், சில தினங்களில் `காலா’ படம் ரிலீஸ் ஆகவிருக்கிறது. இனியும் மக்களைப் போய்ச் சந்திக்கவில்லை என்றால் அவருடைய படம் தமிழகத்தில் ஓடாது என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் தூத்துக்குடிக்கு வந்து எங்களைச் சந்தித்து நிதி உதவி வழங்குகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதனால்தான் எனக்குக் கோபம் வந்து, அவரை அப்படிக் கேட்டேன். எங்களால் எப்படிப் போராடி வெற்றிபெறத் தெரிந்ததோ. அதுபோல எங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் எங்களுக்குத் தெரியும்” என்றார் சந்தோஷ்.

“சில சமூக விரோதிகளால்தாம் கலவரம் ஏற்பட்டது” என ரஜினி பேட்டியளித்திருப்பது பற்றிக் சந்தோஷிடம் கேட்டபோது, “நாங்கள் சமூக விரோதி என்பதை இவர் பார்த்தாரா அல்லது போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்துகொண்டார்கள் என்பதை ரஜினி தனது ஏழாவது அறிவை வைத்து உணர்ந்தாரா? நூறு நாள் போராட்டத்தில் ஒரு நாளாவது எங்களுடன் இணைந்து போராடியிருந்தால்தான் அவருக்குக் கருத்துச் சொல்ல தகுதி உண்டு. எனவே, எங்களைப் பற்றிப் பேச ரஜினிக்கு எந்தத் தகுதியும் கிடையாது” என்றார் கோபமாக.