பொதுவாகவே அழகுபோட்டிகள் நடத்தப்படுவதன் நோக்கம் ஒருவரின் புற அழகை வெளியே கொண்டுவருவது மட்டுமின்றி, அறிவையும், அக அழகையும் வெளியுலகிற்கு தெரியப்படுத்துவதற்காகத்தான். மேலும் அழகுபோட்டிகளுக்கு சமூக பொறுப்பும் இருப்பதால்தான், அப்போட்டிகளில் பங்குபெறுபவர்கள், நல்ல சமூக நோக்கத்திற்காக பாடுபடுவார்கள். இது தவிர அவர்கள் சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் செயல்பட்டு சமூக மேம்பாடு அடைய முயல்வார்கள்.
அழகு போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு சேவை மனப்பான்மை அவசியம் வேண்டும். உலக அளவில், பல்வேறு அழகி போட்டிகளில் கலந்து கொண்டு வென்றவர்கள், சமூக அக்கறையுடன் பல்வேறு மக்கள் நலப்பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டதை நாம் அனைவரும் அறிவோம். அழகி போட்டி மற்றும் சமூக அக்கறை ஆகிய இரண்டு விஷயங்களும் என்னை நிறையவே சிந்திக்க வைத்தது. அதன் விளைவாகவே நான் சமூக நலப்பணியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். அதாவது ஒரு தனிநபரான என்னால் இந்த சமூகத்திற்கு என்ன செய்ய முடியும் என தோன்றியது என்று டாக்டர் ஷீபா லூர்தஸ் கூறியுள்ளார். இவர் முன்னாள் மிஸ் தமிழ்நாடு ஆவார்.
மக்கள் அழகை மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் அதைத்தாண்டி ஒரு பரந்த, விரிந்த உலகம் இருக்கின்றது. முக்கியமாக அழகி போட்டிகளில் வென்று பட்டம் பெற்றவர்கள் சமூகத்திற்கு என்னென்ன நல்ல காரியங்களை செய்யலாம் என்று சிந்தித்து செயல்படுபவர்கள் என்று கூறும் டாக்டர். ஷீபா லூர்தஸ் ஒரு அறிவாற்றல் உளவியல் நிபுணரும் கூட.
நம் நாட்டிலுள்ள அனைத்து குடிமகன்களையும் , உலக அளவில் இருக்கும் மக்களையும் மிகவும் கவர்ந்தவர் பட்டியலில் நமது முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் அவர்களுக்கு என்றென்றும் முக்கிய இடம் உண்டு. அதற்கு அப்துல் கலாம் அவர்களின் எளிமையும், சிறந்த குணநலங்களும், நிர்வாகத்திறங்களும், சமூக அக்கறையும், நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளும் சான்றாகும். அவர் “பிறந்தநாள்” குறித்து கூறிய விளக்கம் : “அன்று ஒரு நாள் மட்டுமே நீ அழும்போது.. உன் தாய் சிரிப்பாள்”. அப்துல் கலாம் அவர்களைத்தவிர இது போன்ற சிறந்த, உணர்ச்சி பூர்வமான விளக்கத்தை யாராலும் கூறியிருக்க முடியாது.
அப்துல் கலாம் அவர்கள் நினைவு நாள் ( ஜூலை 27-ம் தேதி) அன்று எனது பிறந்த நாளும் வருகிறது. அப்துல் கலாம் அவர்கள் மறைவதற்கு முன்னால் வரை, என்னுடைய பிறந்த நாள் சாதாரண நாளாகவே கடந்து சென்றது. ஆனால் அவரது மறைவிற்குப்பிறகு, பாதிக்கப்பட மக்களின் நலங்களில் அக்கறை செலுத்த ஆரம்பித்தேன். அதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றேன். அதாவது ஒன்றுபட்ட சமாரியர்கள் அமைப்பு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கி கஷ்டப்படுபவர்களைக் கண்டுபிடித்து, பிரச்சனைகளில் இருந்து அவர்களை மீட்டு, அவர்களை காப்பாற்றினோம். இதையே எங்களுடைய ஒன்றுபட்ட சமாரியர்கள் அமைப்பின் பொன்மொழி ஆக்கினோம். எங்கள் அமைப்பின் குறிக்கோள் : நேசம் மற்றும் அன்பு ஆகியவற்றை இந்த சமூகத்தில் பரப்பவேண்டும் என்பதே ஆகும். குறிப்பாக பெண்கள். குழந்தைகள் நலன் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு ஆகியவற்றில் தனிக்கவனம் செலுத்தி வருகின்றேன்.
இந்த ஆண்டும் அப்துல் கலாம் அவர்கள் நினைவு நாள் ( ஜூலை 27-ம் தேதி) அன்று, மூன்று நிகழ்வுகளை நடத்தினோம். அன்று காலையில், மைலாப்பூரில் உள்ள லயன்ஸ் ஆக்டிவிட்டி சென்டர், டயாலிசிஸ் மற்றும் டயக்னாஸ்டிக் சென்டருக்கு நன்கொடை, நோயாளிகளுக்கு பழங்கள், பிஸ்கட், சானிடைசர்கள், முகக்கவசங்கள் போன்றவற்றை வழங்கினோம். இந்த நிகழ்வில் நடிகர் திரு. ரியாஸ் கான் போன்ற சினிமா பிரபலங்களும், லயன்ஸ் இன்டர்நேஷனல் இயக்குனர் திரு. ஆர். சம்பத், லயன்ஸ் டிஸ்டிரிக்ட் கவர்னர் 324 A5 திரு. ஆர்.எம். தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நான் லயன்ஸ் கிளப் ஆப் சென்னை யுனைட்டெட் சமாரிடன்ஸ், பிரெசிடெண்ட் ஆக இருப்பதால், லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் என்னை பிறந்த நாள் கேக் வெட்ட சொன்னார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத நான், கொரோனா கொடுங்காலத்தில் இது அவசியமற்றது என்று நினைத்தேன். ஆனால் என்னை கௌரவப்படுத்த வேண்டும் என்று நினைத்த அவர்களின் நல்ல உள்ளங்களை நான் ஏமாற்ற விரும்பாமல், கேக் கட் செய்தேன்.
அடுத்த நிகழ்வாக, சித்தாலப்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், 1,000 மரக்கன்றுகள் நடும் விழாவை நடத்தினோம். இந்த விழாவில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜான் லூயிஸ் அவர்கள் தலைமை தாங்குவதாக இருந்தது. ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான பணி நிமித்தம் காரணமாக அவரால் வர இயலவில்லை. திரு. ராமநாதன், துணை இயக்குனர், மகளிர் திட்டம், செங்கல்பட்டு ஆட்சித்தலைவர் அலுவலகம், திரு. சிவா கலைசெல்வன், பி.டி.ஓ., சிட்லபாக்கம் மற்றும் திரு பஞ்சு பி.டி.ஓ., சிட்லபாக்கம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும் செங்கல்பட்டு மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் தலைவர் திரு ராம் ஜீவன் முந்த்ரா மற்றும் செயலாளர் திரு. புலவர் ஆர். மாணிக்கம் மற்றும் லயன்ஸ் குரூப் 324 A5 முன்னாள், இந்நாள், டிஸ்டிரிக்ட் கவர்னர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒன்று, இரண்டு மாணவர்களை வைத்து மரக்கன்றுகளை நட வைத்தோம். ஜூனியர் ரெட் கிராஸ் சொசைட்டியை சேர்ந்த மாணவர்கள் அப்துல் கலாம் குறித்த பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு பேசினர். மாணவர்களுக்கு அப்துல் கலாம் அவர்களின் புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டது. மாணவர்கள் டாக்டர். அப்துல் கலாம் அவர்களின் கொள்கைகளை பின்பற்றுவோம் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். அனைவருக்கும் மூலிகை மருத்துவ குணம் கொண்ட துளசி செடி பரிசாக கொடுக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும், டாக்டர். ஏ. பி. ஜெ அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் குழந்தைகளோடு இருப்பதையும், அவர்களுக்கு உதவிகள் செய்வதையும் வழக்கமாக கொண்டு இருந்தேன். இந்த ஆண்டு கொரோனா காரணமாக அவ்விதம் இருக்க முடியவில்லை. ஆனால் குழந்தைகளின் இருப்பிடத்தை பசுமையாக மாற்றும் முயற்சியாக 1,000 மரக்கன்றுகளை வழங்கினேன்.
இறுதியாக ஆதனூரில் உள்ள ஹெல்பிங் ஹன்ட்ஸ் என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அங்குள்ள குழந்தைகளுக்கு கல்வி நிதி உதவி, பள்ளி சீருடைகள்,
சானிடைசர்கள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இங்கு நாங்கள் செல்லவில்லை. பாதுகாப்பான முறையில் நலத்திட்ட உதவிகள் அனுப்பிவைக்கப்பட்டது.
அனைத்து நிகழ்வுகளும் அரசின் ஆணைப்படி, சமூக இடைவெளி நடவடிக்கைகள் மற்றும் இதர பாதுகாப்பு ஏற்பாடுகள் முற்றிலுமாக பின்பற்றப்பட்டது.
இறுதியாக நான் கூற விரும்புவது: அப்துல் கலாம் அவர்களுக்கு நம் நாடு பற்றிய தொலைநோக்கு பார்வையில் கல்வி மற்றும் தொழில்நுட்பம் போன்றவை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்களை காப்பாற்ற அப்துல் கலாம் அவர்கள் காட்டிய பாதையில் சென்று வெல்வோம் என்று நிச்சயமாக நம்புகிறேன்.
இவ்வாறு டாக்டர் ஷீபா லூர்தஸ் கூறினார்.