ஜெயலலிதாவும் நானும் 1000 பன்னீர் செல்வத்தைப் பாத்திருக்கோம் – சசிகலா

ஜெயலலிதாவும் நானும் இரண்டு பெண்களாக இருந்து எப்படி எல்லா பிரச்சனைகளையும் சமாளித்தோமோ,அதே போல் இன்னும் எத்தனை ஆண்கள் எனக்கு எதிராக வந்தாலும் அதனை ஒரு பெண்ணாக இருந்து சமாளிப்பேன் என்று சசிகலா கூறியுள்ளார். தொண்டர்களின் ஆதரவுடன் எனது தலைமையிலான அதிமுக ஆட்சியமைக்கும் என்றும் சசிகலா கூறியுள்ளார். தமிழக அரசியல் களம் நொடிக்கு நொடி பரபரப்படைந்து வருகிறது. சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என அதிமுகவில் இரண்டு அணிகளாக பிரிந்த பின்னர் மாறி மாறி குற்றச்சாட்டுகள் அனல் பறக்கின்றன. போயஸ்தோட்டத்திலும் கிரீன்வேஸ் சாலையிலும் செய்தியாளர்கள் சந்திப்பு பேட்டிகள், தொண்டர்கள் மத்தியில் பேச்சுக்கள் என படு பரபரப்பாகவே காணப்படுகின்றன. அகில இந்திய அளவிலான ஊடகங்களின் கவனத்தை பெற்றுள்ளது தமிழக அரசியல் களம். ஆட்சியமைப்பதற்கு ஆளுநர் இன்னமும் அழைப்பு விடுக்காவிட்டாலும் அது பற்றிய பரபரப்பான ஆலோசனையில் இருக்கிறார் சசிகலா. திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய சசிகலா தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் எத்தனையோ சோதனைகளையும், போராட்டங்களையும் சந்தித்து விட்டுத்தான் இந்த நிலைக்கு உயர்ந்திருப்பதாக கூறினார். கடந்த 33 ஆண்டுகளாக பல போராட்டங்களை பார்த்து விட்டுத்தான் வந்திருக்கிறோம். இந்த போராட்டங்கள் எல்லாம் என் கையில் ஒட்டியுள்ள தூசு. அதை ஊதி தள்ளி விடுவேன் என்றும் சசிகலா கூறினார். எதிர்கட்சியில் இருந்து எத்தனை ஆண்கள் வேண்டுமானாலும் வரட்டும் நான் ஒரு பெண்ணாக இருந்து சமாளிப்பேன் என்று சசிகலா கூறிய உடன் அருகில் இருந்த அதிமுக நிர்வாகிகள் கை தட்டினர். பஞ்ச் டயலாக்குகளை சற்றே ஆக்ரோசமாகவே பேசினார் சசிகலா. நானும், ஜெயலலிதாவும் ஆயிரம் பன்னீர் செல்வங்களை பார்த்து விட்டுத்தான் வந்திருக்கிறோம். எத்தனையோ எதிர்ப்புகளை சமாளித்துள்ளோம். அதே போல இந்த பிரச்சினையையும் தனி ஆளாக இருந்து சமாளிப்பேன் என்றும் சசிகலா கூறினார். இது காபாந்து அரசாக இருந்தாலும் அதிமுக அரசுதான். இந்த அரசைக்காக்க, என் உயிரையும் தருவேன். தொண்டர்கள் இருக்கும் வரை என்னை யாரும் அசைக்க முடியாது என்றார். போயஸ் தோட்டத்திற்கு வெளியே தொண்டர்கள் மத்தியில் இதையே பேசிய சசிகலா, கட்சியையும், ஆட்சியையும் யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத்தரப்போவதில்லை என்றார். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதிமுகதான் ஆளுங்கட்சியாக இருக்கும் சசிகலா கூறியுள்ளார்.