ஒட்டுமொத்த தமிழ்சினிமாவும் ஒரு கஷ்டமான சூழ்நிலையை சந்தித்து வருகிறது, இதனால் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஒருமித்த கருத்துக்காக ஒட்டுமொத்த தமிழ் சினிமா துறையும் ஒன்றாக இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயம். குறிப்பாக மிஸ்டர் சந்திரமௌலி படக்குழு தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் விதித்த கட்டுப்பாடுகளை மதித்து முன்னுதாரணமாக இருந்திருக்கிறது. ஆம், ஒட்டுமொத்த மிஸ்டர் சந்திரமௌலி படக்குழுவும் ஏழாவது சொர்க்கத்தில் படப்பிடிப்பை முடித்திருக்கிறது.
இந்த சிறப்பான செய்தியை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் ஜி தனஞ்செயன் கூறும்போது, “சரியான திட்டமிடல், நல்ல செயல்பாடு, படக்குழுவின் சிறப்பான ஒத்துழைப்பு ஆகியவை இல்லையென்றால் இது சாத்தியப்பட்டிருக்காது. ஒட்டுமொத்த மிஸ்டர் சந்திரமௌலி படக்குழுவும் ஆரம்பத்தில் இருந்தே உச்சபட்ச உற்சாகம், ஆற்றலை கடுமையாக வெளிப்படுத்தினர். தயாரிப்பாளர் சங்கம் வெளிப்புற படப்பிடிப்பை நிறுத்த சொல்லி உத்தரவு பிறப்பித்தபோது ஒட்டுமொத்த குழுவும் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று காலில் நெருப்பை கட்டிக் கொண்டு வேலை பார்த்தனர். திட்டமிட்ட நேரத்தில் படப்பிடிப்பை முடித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்த காலகட்டத்தில் மல்ட்டி ஸ்டாரர் படங்களை குறிப்பிட்ட காலத்தில் முடிப்பது எளிதான காரியம் கிடையாது. நவரச நாயகன் கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா கஸாண்ட்ரா, சதீஷ், வரலக்ஷ்மி சரத்குமார், இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன் என அனைத்து பெரிய நட்சத்திரங்களுமே மற்ற படங்களிலும் பிஸியாக இருப்பவர்கள் தான். இந்த பணிகளை மென்மையாக முடிக்க நிறைய முயற்சிகள் தேவைப்பட்டன. குறிப்பாக பிஸியான இடங்கள், பிஸியான நகரங்கள், நாடுகள் ஆகியவற்றில் நான்கு மாதங்களில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க வேண்டிய கூடுதல் அழுத்தமும் எங்களுக்கு இருந்தது.
படத்தின் கேப்டன் இயக்குனர் திரு, ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன், கலை இயக்குனர் ஜாக்கி ஆகியோரின் துணையோடு ஒட்டுமொத்த படத்தையும் அணுகிய விதத்தையும் வெகுவாக பாராட்டியிருக்கிறார் தேசிய விருது பெற்ற ஐகான் தயாரிப்பாளர் தனஞ்செயன். ஒரு சில படங்களிலேயே ரசிகர்களை கவர்ந்த சென்சேஷனல் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இந்த படத்திற்கு இசையமைப்பது கூடுதல் ஈர்ப்பை கொடுத்திருக்கிறது.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் சினிமா சங்கங்களின் வேலை நிறுத்தம் முடிந்தவுடன் துவங்கும் என்றும், அதை தொடர்ந்து உலகம் முழுவதும் படம் வெளியாகும் என்றும் கூறுகிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.