வசனகர்த்தாவாக மாறிய ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி

விக்ராந்த்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் திரைக்கதை அமைத்து வசனத்தை எழுதியிருக்கிறார் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பெறுவதற்காக ஏராளமான திறமையுடன் கடுமையாக உழைத்து வருபவர் நடிகர் விக்ராந்த். இவர் தற்போது வெண்ணிலா கபாடி குழு=2, சுட்டு பிடிக்க உத்தரவு, பக்ரீத் என பல படங்களில் நடித்து வருகிறார்.இதைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்குகிறார் இயக்குநர் சஞ்ஜீவ்.
இது குறித்து படத்தை இயக்கவிருக்கும் இயக்குநரும், விக்ராந்தின் சகோதரருமான சஞ்ஜீவ் பேசுகையில்,‘ 2015 ஆம் ஆண்டில் விக்ராந்த் நாயகனாக நடித்த ‘தாக்க தாக்க’ என்ற படத்தை இயக்கினேன்.  இதைத் தொடர்ந்து சில ஆண்டுகள் கழித்து, நடிகர் விஜய் சேதுபதி சார் அவர்களைச்  சந்தித்தேன். அவரிடம் ஒரு கதையின் சுருக்கமான வடிவத்தைச் சொன்னேன். அதைக் கேட்டதும், மிக நன்றாக இருக்கிறது. இது விக்ராந்திற்கு பொருத்தமாக இருக்கும் என்று சொல்லியதுடன், இதற்கு நான் வசனம் எழுதவா…?என கேட்டார். 
அவர் இருக்கும் பிசியான ஷெட்யூலில் அது எப்படி சாத்தியம்? என்று எண்ணிக் கொண்டிருந்த போது, அவரே கிடைக்கும் நேரங்களில் பணியாற்றலாம் என்று கூறினார்.  சொன்னபடி அவர் நடிக்கும் படங்களின் படபிடிப்பு முடிந்த பிறகு, இரவு நேரங்களில் என்னுடன் கதை விவாதத்தில் பங்கு கொண்டு, திரைக்கதையை மெருகேற்றியதுடன், வசனத்தையும் அவரே எழுதினார். ஏற்கனவே அவர் தயாரித்து, நடித்த ‘ஆரஞ்சு மிட்டாய் ’ என்ற படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார் என்று தெரியும்.. அதற்கு பிறகு அவர் நடிக்காத படத்திற்கு, மற்றொரு நாயகனுக்காக அவர் வசனம் எழுதுவது என்பது இது தான் முதன் முறை. விக்ராந்தின் முன்னேற்றத்திற்காக அவர் செய்திருக்கும் இந்த உதவிக்கு நாங்கள் இருவரும் வாழ்நாள் முழுவதும் நன்றி மறவாமல் இருப்போம். ’ என்றார் இயக்குநர் சஞ்ஜீவ்