ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், பன்னீர் செல்வம் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘கருப்பன்’. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக தன்யா நடித்துள்ளார். இமான் இசையில், யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி கூறியதாவது,”இயக்குநர் பன்னீர்செல்வத்தின் ‘ரேணிகுண்டா’ படத்தைப் பார்த்து நான் அசந்து போனேன். அவ்வளவு மிரட்டலாக எடுத்திருந்தார். அவர், என்னிடம் கதை சொல்ல வந்தபோது நான் மிகவும் பிஸியாக இருந்தேன். அப்போது, ‘கருப்பன்’ கதையை சொல்ல என்னிடம் வந்தார். நான், அரை மணி நேரத்தில் கதையை சொல்லும்படி சொன்னேன். ஆனால் அவர், ‘ரெண்டுமணி நேரம் தேவை, உங்களுக்கு எப்ப ரெண்டு மணி நேரம் கிடைக்குதோ அப்ப வந்து கதை சொல்கிறேன்’ என கிளம்பி விட்டார். பிறகு, அங்கே இங்கே சுற்றி, பல ஹீரோக்களிடம் போய், திரும்பவும் என்னிடமே வந்து விட்டான் ‘கருப்பன்’.
இந்தக் கதைக்குள் என்னை கொண்டுவருவதற்கு அவர், நிறையப் போராடியிருக்கிறார். எனக்கு அவ்வளவு ‘சீன்’ தேவையில்லை! அந்தளவுக்கு நான் பெரிய ஆளும் இல்லை! உள்ளபடியே நான் பிஸியாக இருந்ததால் தான் கதை கேட்க நேரத்தை ஒதுக்கித்தர முடியவில்லை! இந்தக் கதைக்காக அவர், நிறைய பேரை சந்தித்து, நிறைய கசப்பான அனுபவங்களையும் பெற்றுள்ளார். ஆனால், அதைபற்றி அவர் வாயே திறக்கவில்லை, யாரையும் குற்றம் குறை சொல்லவில்லை. இதுவே நானாக இருந்திருந்தால் குறைகளைக் கொட்டி கூடையில் அள்ளியிருப்பேன்.
நான் 2004இல் சினிமாவுக்கு வந்து சின்ன சின்ன கேரக்டர்கள் செய்து, 2010இல் ஹீரோவானேன். இந்த சிறு அனுபவத்திலேயே எனக்கு பல கசப்பான அனுபவங்கள். குறை சொல்ல லிஸ்ட் போட்டால் குறைந்தது 50 பேராவது தேறுவார்கள். ஆனால், பன்னீர்செல்வம் யாரையும் குறை சொல்லவில்லை. இந்த கேரக்டர் எனக்கு பிடிச்சுப்போனது. அவர், நல்ல சிந்தனையாளர், ‘கருப்பன்’ கதையை இயல்பாக உருவாக்கியிருக்கிறார். கணவனுக்கும் மனைவிக்குமான அன்புக்கு பங்கம் வரும்போது அவர்கள் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கிராமிய பின்னணியில் அழகாக சொல்லியிருக்கிறார்” என்றார்.