சமீபமாக நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து வரும் கதைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற தொடங்கிவிட்டன. நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை, திரைக்கதை என்னும் மாலையாக அழகாகக் கோர்த்துப் பல இயக்குநர்கள் கதைகளைச் சொல்லும் விதம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இணைகிறார் அறிமுக இயக்குநர் வெற்றி துரைசாமி.
பல சம்பவங்கள் நாளிதழில் சிறு செய்தியாக வந்திருக்கும். அதை படித்துவிட்டு எளிதில் கடந்துவிடுவோம். அப்படி நாம் கடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. மனிதக் குலத்தின் இன்றியமையாத பகுதியான கால்நடை வளர்ப்பு, உலகமயமாக்கல் கொண்டு வந்த இடம்பெயர்வு பற்றிய கதை இது. தண்ணீர் பஞ்சம், குழந்தை தொழிலாளிகள், நல்ல எதிர்காலத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்களின் முன்னிருக்கும் சவால்களை எல்லாம் காட்சியாக அமைத்து மக்களை யோசிக்க வைக்கும் வகையில் இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார்.
இந்தியாவின் கிராமப்புற மக்களின் எளிய வாழ்வு கால்நடைகளுடன் அவர்களது அழகான உறவைப் பற்றிய இந்தப் படத்துக்கு ‘என்றாவது ஒரு நாள்’ எனத் தலைப்பிட்டுள்ளனர். கொங்கு மண்டலத்தில் உள்ள எதார்த்தமான வாழ்வியலை அப்படியே இந்தப் படத்தில் காணவுள்ளோம். அங்குள்ள வட்டார மொழியை பேசி அனைத்து நடிகர்களும் நடித்துள்ளது இந்தப் படத்தின் சிறப்பம்சமாகும்.
எதார்த்தமான படங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள விதார்த் இதில் நடித்துள்ளார். வித்தியாசமான தனக்கு முக்கியத்துவமுள்ள கதைகளைத் தேர்வு செய்து நடிக்கும் ரம்யா நம்பீசன் நாயகியாக புதிய பரிமாணத்தில் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ‘சேதுபதி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நம்மை கொள்ளைக் கொண்ட ராகவன் நடித்துள்ளார்.
‘தி தியேட்டர் பீப்பிள்’ என்ற நிறுவனம் இந்தப் படத்தின் மூலம் படங்கள் தயாரிப்பில் இறங்குகிறது. வித்தியாசமான அதே சமயத்தில் மக்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் படங்களைத் தயாரிப்பதே இந்த நிறுவனத்தின் நோக்கமாகும். அதில் ‘என்றாவது ஒரு நாள்’ திரைப்படம் தங்களுடைய முதல்படி என்று நம்புகிறார்கள். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக என்.சண்முக சுந்தரம், இசையமைப்பாளராக என்.ஆர்.ரகுநந்தன், எடிட்டராக மு.காசி விஸ்வநாதன் பணிபுரிந்துள்ளனர். அனைத்து பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ள ‘என்றாவது ஒரு நாள்’ ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்தப் படத்தின் மூலம் ஒரு எதார்த்த வாழ்க்கையை நம் கண்முன் காணவிருக்கிறோம். இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.