சினிமா தான் மலேசிய தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் தொப்புள்கொடியாக இருக்கிறது – நடிகர் நாசர்

“ஸ்ரீ ஐஸ்வர்ய ஜனனி கிரியேசன்ஸ்”சார்பில் ஜனனி கே. பாலு மற்றும் “வீடு புரொடக்ஷன்ஸ்”சார்பில் தினேஷ் குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் “வெடிகுண்டு பசங்க”.  முழுக்க முழுக்க மலேசியாவில் நடப்பது மாதிரியான கதைப் பின்னணி கொண்ட இப்படத்தை பெண் இயக்குநரான Dr.விமலா பெருமாள் இயக்கியிருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நாசர் பேசும் போது, 
 
“வெடிகுண்டு பசங்க’ படத்தின் வரவு அவசியமான ஒன்று. மலேசிய வாழ் தமிழர்கள் எப்போதுமே, தமிழ்த் திரையுலகினருக்கு பெரும் பலமாகவும், முதுகெலும்பாகவும் விளங்குபவர்கள். இசை, ஓவியம், நாட்டியம் என எத்தனை கலைகள் இருந்தாலும், சினிமாவுடன் நெருங்கிய உறவு வைத்திருக்கிறார்கள். சினிமா தான் மலேசிய தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் தொப்புள்கொடியாக இருக்கிறது. அங்கிருந்து இது போல இன்னும் நிறைய திரைப்படங்கள் இங்கு வர வேண்டும். முக்கியமாக அவையாவும் தனித்தன்மை வாய்ந்ததாகவும், அங்கிருக்கும் வாழ்வியலை பிரதிபலிப்பவையாகவும் இருக்க வேண்டும். இங்கிருக்கிற கலாச்சாரம், வாழ்வியல் சார்ந்து உருவாகிற தமிழ் சினிமாக்களைப் பார்த்து தயவுசெய்து, படம் செய்யாதீர்கள். உங்களுடைய கலாச்சாரம், வாழ்வியல் சார்ந்த படங்களை உருவாக்குங்கள். அதைப் பார்க்க நாங்கள் ஆசைப்படுகிறோம். 
 
முழுக்க முழுக்க தமிழகத்தின் எல்லைக்குள்ளேயே, இந்திய எல்லைக்குள்ளேயே எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்கள் எல்லாம், உலகம் முழுக்க பல மூலைகளில் திரையிடப்படும் போது, ஏன் அங்கே உருவாகிற படங்களை தமிழகத்தில் வெளியிடக் கூடாது? என்கிற கேள்வி எனக்குள் இருந்து வந்தது.  பல முறை நான் சிங்கப்பூர், மலேசியா செல்லும் போதெல்லாம் அங்கிருக்கிற தயாரிப்பாளர்களிடமும், திரைத்துறையினரிடமும் விவாதிப்பேன். அதற்கெல்லாம் விடையாக இந்த “வெடிகுண்டு பசங்க” வந்திருக்கிறது.” என்று பேசினார்.