வைரமுத்துவின் வழக்கு உயர்நீதிமன்றத்தில் வேறு அமர்வுக்கு மாற்றம்

ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வெடித்தது. தற்போது வரை அதுகுறித்து கருத்துக்கள் வந்த வண்ணமே இருக்கின்றன. இந்நிலையில் வைரமுத்து எழுதிய ஆண்டாள் கட்டுரைக்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.

விசாரணையின் போது நீதிபதி கூறுகையில், “எனக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும். ‘தமிழை ஆண்டாள்’ கட்டுரை குறித்து விக்கிப்பீடியாவில் இருந்து தான் சிறிது தெரிந்து கொண்டேன். தமிழ் நன்றாக தெரிந்தவர்கள் இந்த வழக்கை விசாரித்தால் நன்றாக இருக்கும் என நான் கருதுகிறேன். எனவே வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்படுகிறது. யாராக இருந்தாலும் சரி, மத ரீதியாக புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடக் கூடாது. அதேபோல் ஒருவர் கருத்து கூறும் போது அதை கருத்தாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் ஆராயக் கூடாது” என தெரிவித்தார்.