ஆண்டாளைப் பெருமைப்படுத்துவதே நோக்கம் – கவிஞர் வைரமுத்து விளக்கம்

தமிழை ஆண்டாள் என்ற என் கட்டுரையில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கோள் காட்டிய ஒரு வரியின் ஒரு சொல் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது; பரப்பப்பட்டும் இருக்கிறது. அருள் கூர்ந்து அந்தக் கட்டுரை முழுவதையும் தவறாமல் நீங்கள் படிக்க வேண்டும். அப்போது விளங்கும் என் கட்டுரை யார் மனதையும் புண்படுத்தாது என்று. குறிப்பாக என்னைத் தங்கள் வீட்டில் ஒரு சகோதரனாய் நினைக்கிற எத்தனையோ தாயுள்ளங்கள்அதைத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது என்று என் மனம் துடிக்கிறது. தேவதாசி என்பது ஆண்டாள் காலத்தில் மிக மிக உயர்ந்த பொருளில் வழங்கப்பட்ட வார்த்தை.

கடவுளுக்கு மட்டுமே சேவை செய்வதற்காகத் தம் மொத்த வாழ்வையும் ஒப்படைத்துக்கொண்ட உயர்ந்த பெண்களுக்கே தேவரடியார் அல்லது தேவதாசி என்ற திருப்பெயர்கள் வழங்கப்பட்டு வந்தன. அவர்கள் கடவுளுக்கு மட்டுமே சொந்தமானவர்கள். பின்னாளில் தேவதாசி என்ற உயர் பொருள் நிலவுடைமைச் சமூகத்தால் பொருள் மாற்றம் பெற்றது. பழங்காலத்தில் நறுமணத்தை மட்டுமே குறித்த நாற்றம் என்ற சொல், பிற்காலத்தில் துர்நாற்றம் என்றே திரிந்துவிட்டது. அப்படித்தான் ஆண்டாள் காலத்தில் உயர்பொருளில் வழங்கப்பட்ட சொல் பிற்காலத்தில் பொருள் மாற்றம் பெற்றுவிட்டது.

பிற்காலப் பொருளைக் கொண்டு அக்காலச் சொல்லைப் புரிந்துகொள்ளக் கூடாது. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த பேராளுமைகளை இலக்கிய முன்னோடிகள் என்ற வரிசையில் தினமணியில் எழுதி வருகிறேன். திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், அப்பர், திருமூலர், வள்ளலார், உ.வே சாமிநாத ஐயர், பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், புதுமைப்பித்தன் என்ற வரிசையில் ஆண்டாளின் பெருமையும் எழுத நினைத்தேன். ஆண்டாளைப் பற்றி மூன்று மாதங்கள் அரிய நூல்களைப் படித்துத் தகவல் திரட்டிய நான் “Indian Movements : Some Aspects of Dissent, Protest and Reform” என்ற சுபாஷ் சந்திர மாலிக் தொகுத்து அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட ஆங்கில
ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பு நூலையும் படித்தேன்.

அதில் “Bhakti Movement in South India”என்ற கட்டுரையைக் கண்ணுற்றேன். அந்தக் கட்டுரை பேராசிரியர் நாராயணன், பேராசிரியர் கேசவன் என்ற அறிஞர் பெருமக்களால் எழுதப்பட்டது. திரு நாராயணன், இந்திய வரலாற்று ஆய்வு மன்றத்தின் தலைவராக இருந்தவர். இந்தியப் பண்டை வரலாற்றில் முத்திரை பதித்தவர் என்று போற்றப்படுபவர். அந்தக் கட்டுரையில் அவர் எழுதிய ஒரே ஒரு வரியைத்தான் நான் மேற்கோளாக எடுத்தாண்டிருந்தேன். அவர்கள் தேவதாசியை எப்படி உயர்ந்த பொருளில் கொண்டிருந்தார்களோ, நானும் அதே உயர்ந்த பொருளில்தான்
கையாண்டிருக்கிறேன்.

இதைப் புரிந்துகொண்டால் எவர் மனமும் புண்படவேண்டிய அவசியம் இல்லை. நாற்பத்தாறு ஆண்டுகளாகத் தமிழோடு வாழ்ந்து வருகிற நான் என்னை உயர்த்திய தமிழ்ச் சமூகத்தைப் புண்படுத்துவேனா? எழுத்தின் பயன் அன்பும் இன்பமும் மேன்மையும் என்று கருதுபவன் நான். ஆண்டாள் தமிழை வணங்குபவன் நான். இதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதே எல்லோருக்கும் என் அன்பான வேண்டுகோள்.