தேசதுரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 50 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் மக்கள் தலைவர் வைகோ இன்று ஜாமின் மனு தாக்கல்
சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டுவிழாவில் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை 15ஆம்தேதி விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக வைகோ மீது தேச விரோத வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் அல்லது தன்னை சிறையில் அடைக்க வேண்டும் என்று வழக்கில் நேரில் ஆஜரான வைகோ கோரிக்கை வைத்திருந்தார்.அவரை சொந்த ஜாமீனில் செல்லும்படி கோர்ட்டு கேட்டுக் கொண்டதை அவர் ஏற்கவில்லை.
இதையடுத்து, அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு கோபிநாத் உத்தரவிட்டார். இதன்படி புழல் சிறையில் அடைக்கப்பட்ட வைகோ, கடந்த 17ஆம்தேதி எழும்பூர் கோர்ட்டில் மீண்டும் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த தேச விரோத வழக்கை விசாரிக்கும் அதிகாரம் செசன்சு கோர்ட்டுக்கு தான் உள்ளது என்பதால், வழக்கை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுக்கு மாற்றி, எழும்பூர் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.இந்த வழக்கு கடந்த மாதம் 27ஆம்தேதி நீதிபதி நசீமா பானு முன்பு விசாரணைக்கு வந்த போது, சிறையில் இருந்து வைகோ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போதும் வைகோ ஜாமீன் கேட்கவில்லை.
இந்தநிலையில், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி வைகோ திடீரென இன்று சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த தேச துரோக வழக்கு வரும் 2ஆம்தேதி இதே கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.