பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிப்பில், கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர்கள் சந்தானம், மேகா ஆகாஷ் நடித்திருக்கும் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. இதன் தேங்க்ஸ் மீட் நடந்தது.கிரியேட்டிவ் புரொடியுசர் நட்ராஜ், “இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய அனைவருக்கும் நன்றி. கார்த்திக் யோகி சொன்ன இந்தக் கதைக்குத் தேவைப்பட்ட பட்ஜெட் அந்தக் கதைக்குத் தேவையான ஒன்றாகவே இருந்தது. தொடர்ந்து 63 நாட்கள், இடையில் ஒரு நாள் கூட பிரேக் எடுக்காமல் இதன் படப்பிடிப்பை எடுத்து முடித்தோம். அந்த அளவுக்கு கடின உழைப்பைக் கொடுத்துள்ளோம். பழனி, திண்டுக்கல், பொள்ளாச்சி என லொகேஷனும் மாற்றி மாற்றி இயக்குநர் கார்த்திக் கொடுத்திருக்கிறார். அவருக்கு நன்றி. ஹீரோயின் மேகா ஆகாஷூம் சிறப்பான ஒத்துழைப்புக் கொடுத்தார். கூல் சுரேஷ், பிரஷாந்த் என அனைவரும் எந்தவிதமான கஷ்டமும் பார்க்காமல் நடித்துக் கொடுத்தனர். சந்தானம் சார் சிறந்த நடிகர். அவருடன் வேலைப் பார்த்தது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி” என்றார்.
நடிகர் எம்.எஸ். பாஸ்கர், “படத்தை அற்புதமாக எடிட் செய்த எடிட்டர், கேமராமேன் என அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. ’சின்ன பாப்பா பெரிய பாப்பா’, ‘பேட்டரி’ படத்திற்குப் பிறகு இந்தப் படத்தில்தான் மாற்றுத் திறனாளியாக நடித்திருக்கிறேன். மேகா தமிழ் பேசும் நடிகை. நன்றாக வரவேண்டும். சந்தானம் எனது தம்பி. அவர் படத்தில் நான் இருக்க வேண்டும் என்று வாஞ்சையாகக் கூப்பிடுவார். கார்த்திக் யோகியும் சிறப்பான உழைப்பை கொடுத்துள்ளார். இந்த படம் வெற்றி அடைய உதவிய அனைவருக்கும் நன்றி. நூறாவது நாள் படத்தின் வெற்றி விழாவிற்கு வர வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.
நடிகர் ஜான் விஜய், ” விஜய் டிவி காலத்தில் இருந்தே நடிகர் சந்தானத்தை பார்த்து வருகிறேன். மிகவும் கடினமான உழைப்பாளி. ஜாலியாக இருப்பார். சந்தானத்தின் படங்கள் எப்போதும் போர் அடிக்காது. அது போலவே இந்த படமும் உங்களை சந்தோஷப்படுத்தியதில் மகிழ்ச்சி. ரவிமரியா, மேகா ஆகாஷ், சேஷூ என அனைவருமே செட்டில் ஜாலியாக இருந்தோம். இப்படியான ஒரு அற்புதக் குடும்பத்தை கொடுத்த இயக்குநர் கார்த்தி யோகிக்கு நன்றி. சந்தானம் சாருக்கும் உடன் வேலைப் பார்த்த எல்லோருக்கும் நன்றி”.
நடிகர் ரவிமரியா, “ஆத்தா நான் பாஸாயிட்டேன் என்ற மனநிலையில்தான் நாங்கள் உள்ளோம். குடும்பம் குடும்பமாக அனைவரும் இந்தப் படத்தை ரசிக்கின்றனர். சினிமாவில் வெற்றிப் பெறுவது எளிது கிடையாது. அதை கார்த்திக் யோகி செய்து காட்டியுள்ளார். படம் வெளியாகி ஒருவாரத்திலேயே படம் போட்ட அதன் முதலீட்டை எடுத்து விட்டது. இந்தப் படத்தின் வெற்றிக்கு சந்தானம் சார் மிகப்பெரிய ஆணிவேர். எல்லோருக்கும் திரையில் அதிக இடம் கொடுத்துள்ளார் சந்தானம் சார். தயாரிப்பாளரும் படத்திற்கும் பெரிய ஆதரவைக் கொடுத்துள்ளார். கூல் சுரேஷ், சேஷூ என அனைவருமே தியேட்டரை சிரிப்பால் வெடிக்க வைத்துள்ளனர். தொழில்நுட்பக் குழுவும் சிறப்பு. படத்திற்கு ஆதரவு கொடுத்து வெற்றிப் பெற வைத்த அனைவருக்கும் நன்றி”.
நடிகர் நிழல்கள் ரவி, “இந்தப் படத்தின் மூலம் எனக்கு இன்னும் பெருமைக் கொடுத்த இயக்குநர் கார்த்திக் யோகிக்கு நன்றி. கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் சினிமாவில் எனக்கு ஆதரவு கொடுத்து இருக்கிறீர்கள். கே. பாலச்சந்தர் சார் ரஜினியை பார்த்து அவரிடம் ஏதோ இருக்கிறது என்று அடுத்தடுத்து வாய்ப்பு கொடுத்து எப்படி உச்சத்தில் கொண்டு வந்தாரோ அது போலவே என்னிடம் இந்த காமெடி திறன் இருக்கிறது என்று இந்த வாய்ப்பைக் கார்த்திக் யோகி கொடுத்திருக்கிறார். கதாநாயகன், நகைச்சுவை நாயகன் என சந்தானம் கலக்கி வருகிறார். அவருடன் ஒரு படம் நடிக்க வேண்டும் என்ற ஆசை இந்தப் படம் மூலம் நிறைவேறியது. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்”.
நடிகர் சேஷூ, ” இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொண்டேன். அப்படியே ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை எந்த தடையும் இல்லாமல் பெரிய வெற்றி பெற்று இருக்கிறது. சந்தானம் படத்தில் நடித்தால்தான் எனக்கு லைஃப். நாலு காட்சி என்றாலும் நச்சென்று கொடுத்துவிடுவார். படம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவுக்கு நன்றி”.
நடிகர் கூல் சுரேஷ், ” சந்தானம் சார் பற்றி நிறைய பேசி விட்டேன். அவருடைய நல்ல குணம் தெரிஞ்சுதான் அவருடைய பெற்றோர்கள் அவருக்கு சிறு வயதிலேயே சந்தானம் என வாசனையான பெயர் வைத்திருக்கிறார்கள். பிக் பாஸூக்கு பிறகு எனக்கு பெரிய மாற்றம் வந்திருக்கிறது. அந்த மாற்றத்தை இந்த படம் இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறது. படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் நன்றி”.
நடிகர் பிரஷாந்த், “இந்தப் படத்திற்கு இவ்வளவு பெரிய ரெஸ்பான்ஸ் கொடுத்த அனைவருக்கும் நன்றி. சந்தானம் சார், மேகா ஆகாஷ், சேஷூ என அனைவருமே கடினமான உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். கார்த்திக் இந்தப் படத்தைக் குழந்தை போல எடுத்துச் சென்றார். படம் தியேட்டரில் அதன் முதலீட்டை எடுத்து விட்டது. படத்தை வாங்கிய யாருக்கும் நஷ்டம் இல்லை என்பதுதான் சூப்பரான ஒன்று. கார்த்தியின் ‘டிக்கிலோனா’ படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகியிருந்தாலும் இதேபோன்ற வெற்றியைப் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. படத்தில் நடித்துள்ள ரவிமரியா, எம்.எஸ். பாஸ்கர் இவர்கள் எல்லாம் என் அண்ணன்களைப் போன்றவர்கள். எல்லோருக்கும் நன்றி”.
நடிகை மேகா ஆகாஷ், “இந்தப் பயணம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். அதை உருவாக்கித் தந்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. பாட்டி இறப்பால் எனக்கு படப்பிடிப்பு சமயத்தில் கஷ்டமாக இருந்தது. ஆனால், என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். இந்தப் படத்தின் கதை கேட்கும்போது கண்டிப்பாக இது ஸ்பெஷல் படம் வெற்றி பெறும் என்பது எனக்கு தெரியும் இந்த விஷயம் கொடுத்த பார்வையாளர்களுக்கும் மீடியாவுக்கும் நன்றி”.
இயக்குநர் கார்த்திக் யோகி, “வெறும் காமெடி படமாக மட்டும் இல்லாமல் படத்தின் ரைட்டிங்கும் நன்றாக இருந்தது எனப் பலரும் பாராட்டினார்கள். அந்த ரைட்டிங்கில் தலையிடாமல் சந்தானம் 63 நாட்களும் படத்தை நம்பினார். அவருக்கு நன்றி. என் உதவி இயக்குநர்கள், தொழில்நுட்பக் குழுவினருக்கு நன்றி. ஜாக்குலின், ரவிமரியா சார், எம்.எஸ். பாஸ்கர், துணை நடிகர்கள் எல்லோருக்குமே நன்றி” என்றார்.
நடிகர் சந்தானம், “தயாரிப்பாளர் விஸ்வா சாரில் இருந்து டீ குடிக்கும் பையன் வரை எல்லோருக்கும் நன்றி. இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் போலவே அனைவரது கதாபாத்திரமும் மக்களுக்குப் பிடித்திருந்ததுதான் இந்தப் படத்தின் வெற்றி என்று நினைக்கிறேன். நாத்திகரோ ஆன்மீகவாதியோ நீங்கள் எப்படி இருந்தாலும் அந்த கண்ணோட்டத்தில் படம் பார்க்கலாம். அப்படிதான் இது அமைந்திருக்கிறது. பொதுவான ஒரு முடிவும்தான் இயக்குநர் கொடுத்திருக்கிறார். நான் ஆன்மீகவாதிதான். சோஷியல் காமெடி செய்வது கடினம். அதை இயக்குநர் அழகாக செய்திருக்கிறார். மக்களின் வாழ்வு இப்போது இறுக்கமாக இருக்கிறது. என்னையும் என்னை சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். அதை பார்த்து தான் எனக்கு பல பட வாய்ப்புகளும் வந்தது. சிம்புவும் என்னை கூப்பிட்டார். இந்த இயல்பை எனக்குக் கடவுள் கொடுத்திருக்கிறார். என் படங்களுக்கு வந்தால் நீங்கள் சந்தோஷமாகப் போகலாம்” என்றார்.