“ஒரு குப்பைக் கதை” படத்தை வெளியிடும் உதயநிதி
டான்ஸ் மாஸ்டர் தினேஷ், ஹீரோவாக அறிமுகமாகும் படம் ’ஒரு குப்பைக் கதை’. குப்பை பொறுக்கும் இளைஞனைப் பற்றிய படத்தில் டான்ஸ் மாஸ்டர் தினேஷ், கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக மனிஷா யாதவ் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் காளி ரங்கசாமி இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தை நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறார். மே 25-ம் தேதி ரிலீசாக இருக்க்கும் இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸ் சத்யம் திரையரங்கத்தில் நடந்தது. இந்த விழாவில், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், ஆர்யா, இயக்குநர்கள் பாண்டிராஜ், அமீர், சீனு ராமரசாமி, எழில், பொன்ராம், சுசீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் உதயநிதி பேசுகையில்,”தினேஷ் மாஸ்டருக்கும், எனக்கும் நல்ல நட்பு இருக்கிறது. எனது முதல் மூன்று படங்களுக்கும் தினேஷ் மாஸ்டர் தான் நடன இயக்குநர், எனக்கு நடனம் கற்றுக் கொடுத்து, என்னை ஊக்குவித்தவர் இவர் தான். எங்கள் இருவருக்கும், அண்ணன்-தம்பிக்கான பாசம் இருக்கிறது. இவர் ஏன் ஹீரோவாக நடிக்கிறார்? என்று முதலில் யோசித்தேன்.
பின்னர், கதையைப் பற்றி கேள்விப்பட்டதும் இதற்கு அவர் தான் பொருத்தமானவர் என முடிவு செய்தேன். அத்துடன், படத்தை நானே வெளியிடலாம் என்கிற தீர்மானத்துக்கு வந்தேன். ‘மைனா’ படத்தைப் போன்ற தாக்கத்தை ‘ஒரு குப்பைக் கதை’ படம், ஏற்படுத்தும் என நம்புகிறேன்.” என்றார்.